10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட் அடுத்த வாரம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  


கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக கடந்த 2020, 2021ஆம் ஆண்டில் பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020- 21ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு,  மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. 


தாமதமாகத் தொடங்கிய பொதுத் தேர்வுகள் 


இதற்கிடையே 2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வுகள் மே மாதம் தொடங்கி, அதே மாதத்தில் முடிவடைந்தன. 10, 11, 12 ஆகிய 3 வகுப்புக்கான பொதுத் தேர்வுகளையும் சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதினர். 


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் மே 30 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் மே 31ம் தேதி வரை பொதுத்தேர்வு நடந்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மே 5 முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை நடைபெற்றன. 


இந்த நிலையில் 2022- 23 ஆம் கல்வி ஆண்டு எந்த தாமதமும் இல்லாமல் ஜூன் மாதம் தொடங்கியது. கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், அனைத்துப் பள்ளிகளிலும் நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. 


மார்ச் 13ஆம் தேதி  முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில்,  8,51,482 மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர். 11ஆம் வகுப்புத் தேர்வை 7,87,783 மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.


தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை


10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், 9,38,067 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுத உள்ளதாக இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது. 


10, 11 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதில் தமிழ் வழியில் எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட சரி பாதியாக உள்ளது. அதாவது, 12 லட்சத்து 91,605 மாணவர்கள் தமிழ் வழியில் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.