நெல்லை வண்ணார்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன்- தேவிப் பிரியாவின்  14 வயது மகள் பிரிஷா. இவர் 9- ம் வகுப்பு படித்து வருகிறார். தனது 1 வயதில் இருந்தே யோகா கலையை கற்று தந்த தனது பாட்டியை குருவாக ஏற்றுக் கொண்டார்.


பாட்டியை தொடர்ந்து தனது தாயிடம் இருந்து யோகாசனங்களை கற்றுள்ளார். பின் 5 வயதிலிருந்தே மாநில, தேசிய சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் இதுவரை 70 உலக சாதனைகளை படைத்துள்ளார். 200க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், விருதுகளையும் பெற்று தனது வீட்டில் உள்ள ஒரு அறை முழுவதும் அலங்கரித்து வைத்துள்ளார்.


உலகிலேயே இளம் வயதில் அதிக உலக சாதனைகள், யோகாசனங்கள், நீச்சல் மற்றும் கண்களைக் கட்டிக் கொண்டு பல திறமைகளை செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு  யு.எஸ்.ஏ குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது. மேலும் இளம் வயதிலேயே மூன்று முனைவர் பட்டங்களையும் முதன் முறையாக பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளம் வயது யோகா ஆசிரியர் என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கி கௌரவித்துள்ளது .


100ஆவது சாதனை 


70 உலக சாதனைகள் செய்துள்ள பிரிஷா தனது  100 சாதனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வந்த நிலையில் கண்களை கட்டிக்கொண்டு 30 நிகழ்வுகளை செய்து தனது நூறாவது உலக சாதனையை  தற்போது நிறைவு செய்துள்ளார். பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் நடந்த நிகழ்வில் நோபல் வேர்ல்டு ரெகார்ட் நிறுவனம் முன்பு மாணவ மாணவிகள் முன்னிலையில் 20 நொடிகளில் கண்களை கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட்களை அடையாளம் காணுதல், கண்களைக் கட்டிக் கொண்டு திரையில் தெரியும் ஆசனங்களை மிக்க வேகமாக செய்வது, கண்களைக் கட்டிக் கொண்டு மனித உடலில் கட்டப்பட்டுள்ள பலூன்களை உடைத்தல், மேலும் கண்களைக் கட்டிக் கொண்டு 20 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தில் காட்டும் சைகைகளை அதிக எண்ணிக்கையில் அடையாளம் காட்டுதல், கண்களைக் கட்டிக் கொண்டு அதிக தூரம் சைக்கிள் ஓட்டுதல், கண்களை கட்டிக்கொண்டு ஒரு கையால் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வுகளை செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார் இவரின் உலக சாதனையை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதிவு செய்துள்ளது.





இது குறித்து சாதனை மாணவி பிரிஷா கூறுகையில், ’’எனது பெற்றோரின் முயற்சியால் இரண்டு வயதில் இருந்து யோகாசனம் கற்று பல்வேறு சாதனைகளை இதுவரை நிகழ்த்தியுள்ளேன் பார்வை அற்றவர்களுக்கு யோகாசனம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். 70 சாதனைகள் செய்துள்ள நிலையில் 100 சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று இலக்குடன் இன்று ஒரே நாளில் 30 சாதனைகள் செய்து எனது நூறு சாதனைகள் இலக்கை பூர்த்தி செய்துள்ளேன்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.




   


இதனைத் தொடர்ந்து நோபல்  வேர்ல்ட் ரிக்காட் சி.இ.ஒ அரவிந்த் கூறுகையில், ’’மாணவி பிரஷா இன்று ஒரே நாளில் கண்களைக் கட்டிக்கொண்டு 30 சாதனைகளை செய்துள்ளார். உலகில் இதுவரை இந்த சாதனைகளை யாரும் செய்யவில்லை, இவர் தான் முதன்முறையாக செய்கிறார்’’ என கூறினார்.


சாதனை மாணவி பிரிஷாவிற்கு  நெல்லை மக்களிடையே மட்டுமின்றி உலக அளவிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.