100 நாள் சவாலின் அடிப்படையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைத் திறன் மதிப்பீடு செய்யப்படுவதாக, தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்துத் தொடக்கப் பள்ளி இயக்குநர் கூறும்போது, தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் மற்றும் கணக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய திறன்களில் தயாராக உள்ளதாக 4,552 தொடக்கப் பள்ளிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடிப்படைத் திறனை அளவிட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.

குறிப்பாக வகுப்புக்கு குறைந்தபட்சம் 5 மாணவர்கள் வீதம் பரிசோதிக்கப்பட வேண்டும். இதில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (ஏப். 4) தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களுக்கு மதிப்பீடு செய்யப்படுகிறது.

முன்னதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 100 நாள் சவாலை அறிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.

பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு  மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக புத்தகங்கள்‌ மற்றும்‌ கரும்பலகைகள்‌ வாயிலாக நடைபெற்ற கற்றல், கற்பித்தல்‌ நிகழ்வின்‌ ஓர்‌ உச்சமாக உரைகள்‌, படங்கள்‌, ஆடியோ மற்றும்‌ வீடியோ போன்ற பல்வேறு வடிவங்களில்‌ தகவலைப்‌ பெற்று பாடப்பொருள்களை எளிதாகப்‌ புரிந்துகொள்ளவும்‌, பெற்ற தகவல்களைத்‌ தக்கவைத்து கொள்ளவும்‌ மற்றும்‌ அரசு பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன்‌ பொருத்தமான கற்றல்‌ சூழலை உருவாக்கவும்‌ 22,931 திறன்‌ மிகு வகுப்பறைகள்‌ ரூ.455.32 கோடி மதிப்பீட்டில்‌ அரசு தொடக்கப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ 11,76,452 மாணவர்கள்‌ பயனடையும்‌ அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.