தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி 4 தேர்வினை தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் 1,06,082 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களுக்கு உட்பட்ட 270 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 361 தேர்வு கூடங்களில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது காலை 9:30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்ற தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஒன்பது மணிக்கு மேல் வருகை தருபவர்களை தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தத் தேர்வை கண்காணிப்பதற்காக 5,310 அறை கண்காணிப்பாளர்களும், 361 தலைமை கண்காணிப்பாளர்களும், 89 நடமாடும் கண்காணிப்பு குழுக்களும், 20க்கும் மேற்பட்ட பறக்கும் படைகளும் 14 கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.



மேலும், தேர்வு மையங்களை கண்காணித்திடவும் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும் பொருட்டு பல்வேறு நிலையிலான அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்வு எழுதுவோரின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தேர்வு மைய நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் தடையெல்லாம் மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக மேற்கொண்டு வருகின்றனர். தேர்வு மையங்களில் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். மேலும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் மூலம் தேவைப்படும் இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.



இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் தலைவாசல் ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது, பல்வேறு நிலையிலான அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யும் வகையில் ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குரூப் 4 தேர்வு மையங்களை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.