சமீப காலமாக இளைஞர்கள் சிலர் பைக்குகளில் சாகசம் செய்து அவற்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது அதிகரித்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ஆபத்தான முறையில் அவர்கள் செய்கின்ற சாகசம் அவர்களுக்கு மட்டுமில்லாமல், சுற்றி இருப்பவர்களுக்கும் அச்சுறுத்தும் வகையில் அந்த சாகசங்கள் இடம்பெறுகின்றன. இது குறித்த வீடியோக்கள் வெளியாகும்பொழுது, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது அவ்வப்பொழுது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.
TTF வாசனின் வீலிங் சாகசத்தை பின்பற்றி இளைஞர்கள் பலரும் இவரை போன்ற எண்ணங்களிலேயே வீலிங் செய்தவாறே வாகனங்களை இயக்கி வருவதாகவும் ஒருபுறம் குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளன. அதற்கு ஏற்றார்போல் டிடிஎஃப் வாசன், தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியும் வந்தார்.இதற்கு பல வருடங்களாக விடை இல்லாமல் இருந்துவந்த நிலையில் முதல் முதலாக காஞ்சிபுரத்தில் டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கியது தொடர்பாக வழக்குப்பதிவானது செய்யப்பட்டது. காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் இருந்த நிலையில், பிணை கிடைத்து தற்பொழுது வெளியே சுற்றி வருகிறார்.
காஞ்சிபுரம் பாலு செட்டி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட்டு வரும் அவர், தன் மீது வைக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் எதிர்த்து பேசியும் வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தினமும் காவல் நிலையம் வரும் அவருக்கு, சிறுவர்கள் இளைஞர்கள் பலரும் நேரில் சென்று தினமும் வரவேற்பு கொடுத்து அட்ரஸாசிட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபுறம் டிடிஎஃப் வாசன் கதை இப்படி சென்று கொண்டிருந்தால், அவரைப் பின்பற்றினால் தமக்கும் அதிக அளவு பாலோவர்ஸ் வருவார்கள், என்ற தவறான எண்ணத்தில் பல இளைஞர்கள் விலையுயர்ந்த பைக்குகளை பயன்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மக்களை அச்சுறுத்தும் வகையில் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் திருச்சியில் தீபாவளி அன்று பட்டாசுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து வீலிங் செய்தவரே பட்டாசுகளை வெடித்து அட்ராசிட்டி செய்த இளைஞர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தநிலையிலே செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி பகுதியிலே இளைஞர் ஒருவர் வீலிங் சாகசம் நிகழ்த்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கமான duke_gokul என்கிற ஐடி-ல் பதிவேற்றிருக்கிறார்.இந்த வீடியோவானது சமூக வலைதளங்களிலே வேகமாக வைரல் ஆகி பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவர் விதவிதமாக கலர் கலராக சட்டை அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆபத்தான முறையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் தூக்குவதும், இரண்டு கைகளையும் விட்டு வண்டி ஓட்டுவதும் இது போன்ற காட்சிகளை மட்டுமே தனது இன்ஸ்டாகிராம் ஐடியில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்தநிலையில், இந்த வீடியோ குறித்த காட்சிகள் வெளியான நிலையில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தற்போது களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் செங்கல்பட்டு அடுத்துள்ள புலிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் எனவும், வெங்கடேசன் என்பவரை மகனான கோகுல் என்பதும் தெரிய வந்தது. தற்பொழுது மகேந்திரா சிட்டி பகுதியில், உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்பொழுது, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள மல்ராசபுரம் பகுதியில் , வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.இதனை அடுத்து கோகுல் கைது செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் ,அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்த கோகுல் மீது , பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுவது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோகுலுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. லைசன்ஸ் இல்லாமலே, இளைஞர் கோகுல் இது போன்ற விபரீதங்களில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.