மத்தியப் பிரதேசத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் அவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் என்ன நடந்தது எனப் பார்க்கலாம். 

Continues below advertisement

மத்தியப்பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் பால்மிகி என்ற 22 வயது இளைஞர் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி காணாமல் போனார். இதுதொடர்பாக அவர் மனைவி துளசி காவல்துறையில் புகாரளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மிக தீவிரமாக ஆரம்பத்தில் விசாரணை நடத்தினர். ஆனால் வழக்கு தொடர்பாக எந்தவித துப்பும் கிடைக்காததால் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டது.

ஆனால் தங்களது மகன் பிரின்ஸ் பால்மிகி காணாமல் போனது தற்செயலானது அல்ல என அவரது குடும்பத்தினர் தொடர்ச்சியாக போலீசாரிடம் சொல்லி வந்தனர். இதனால் அவ்வப்போது இதுதொடர்பான தகவல்கள் கிடைக்கிறதா என வழக்கை காவல்துறையினர் உயிர்ப்புடன் வைத்திருந்தனர். 

Continues below advertisement

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில் தொழில்நுட்ப கண்காணிப்பு காரணமாக சோயிப் என்பவர் நர்சிங்பூரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதன்படி காதல் விவகாரம் காரணமாக பிரின்ஸ் மீது போதைப்பொருள் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக சோயிப் ஒப்புக்கொண்டார். இந்த விவகாரத்தின் பிரின்ஸ் மனைவி துளசிக்கும் பங்கு இருப்பதும், இருவரும் திட்டமிட்டு இந்த கொடூர கொலையை அரங்கேற்றியதும் கண்டறியப்பட்டது.

பிரின்ஸ் உடனான திருமணத்திற்கு முன்பு இருந்தே துளசியும் சோயப்பும்  காதல் உறவில் இருந்துள்ளனர். இருவரும் சமூக ஊடகம் வழியாக அறிமுகமாகி திருமணத்திற்குப் பிறகும் இருவருக்குமிடையேயான கள்ளத்தொடர்பு தொடர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது. திருமணமான ஒரு மாதத்திற்குள் துளசியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் பிரின்ஸூக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தம்பதியினர் இடையே தகராறு நிகழ்ந்தது. இதன் காரணமாக இந்த தம்பதியினர் தியோரியில் துளசி வீட்டில் சென்று தங்கியுள்ளனர்.

அங்கு வந்த பிறகு பிரின்ஸூக்கு சோயிப் பழக்கமானார். இருவரும் அடிக்கடி போதை பொருட்களை இணைந்து பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை சாக்காக கொண்டு துளசியை சோயிப் சந்தித்து தனிமையில் நேரம் செலவிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பிரின்ஸூக்கு சோயிப்-துளசி இடையேயான உறவு பற்றி தெரிய வந்தது. அவர் துளசியை கடுமையாக கண்டித்துள்ளார். 

தங்கள் உறவுக்கு இடையூறாக இருந்த பிரின்ஸை கொலை செய்ய சோயிப் - துளசி முடிவு செய்தனர். வழக்கம்போல போதைப்பொருளை கொடுத்து மூர்ச்சையாகி போன பிரின்ஸை கொலை செய்த பின்னர், தாங்கள் மாட்டிக் கொள்ளக்கூடாது என உடலை தனது வீட்டின் பின்னால் உள்ள செப்டிக் டேங்கில் வீசி அதன்மேல் குப்பைகளை போட்டு மறைத்து வைத்தார். மேலும் சோயில் அந்த செப்டிங் டேங்கை ஒரு மாதமாக கண்காணித்து பிரின்ஸ் உடல் சிதைவை வேகமாக உப்பை போட்டதாகவும் தெரிய வந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து சோயிப்பை அழைத்துச் சென்று செப்டிக் டேங்கை பார்வையிட்ட நிலையில் அதில் இருந்து ஒரு மண்டை ஓடு, எலும்புகள் ஆகியவை மீட்கப்பட்டது.  இந்த கொலைக்குப் பிறகு சோயப் துளசி இருவரும் குஜராத்திற்கு தப்பிச் சென்றனர். அவர்கள் இருவரின் வீடியோக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பிரின்ஸ் குடும்பத்தினர் பார்வையிட நேர்ந்ததால் அவர்களுக்கு சந்தேகம் வலுத்தது. எலும்புகள் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.