திருவாரூரில் ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய நபர் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே மொபைல்போன் மூலம் அனைத்தையும் பெறும் நிலைக்கு வந்து விட்டோம். அந்த வகையில் கடன் பெறும் வகையில் சில செயலிகளும் செயல்பட்டு வருகிறது. வங்கிகள், நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் தங்களை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் சேவையை எளிதாக்குகின்றன. தினம் தினம் நமக்கு கடன் வேண்டுமா என்ற மெசெஜ்களும் வந்து கொண்டே தான் இருக்கின்றன.
இப்படியான நிலையில் ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய நபர் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள ஏரி வேலூர் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவரது மகன் ராஜேஷ் என்ற 27 வயது இளைஞர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இதற்கிடையில் கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவர், மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். இந்த தொகையை முழுவதையும் ராஜேஷ் செலுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் கடன் கொடுத்த நிதி நிறுவனம் கட்ட வேண்டிய பாக்கித்தொகை உள்ளது என கூறி ராஜேஷை தொடர்ந்து தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். மேலும் ராஜேஷ் செல்போனில் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு மிரட்டியும் வந்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த ராஜேஷ் வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து மயங்கி கிடந்த ராஜேஷை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வலங்கைமான் காவல் ஆய்வாளர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)