பெங்களூருவில் பைக் டாக்ஸியில் சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் காரணமாக வாகன போக்குவரத்தும் கூட எளிதாகி விட்டது. இருந்த இடத்தில் இருந்தே பயண டிக்கெட்டுகள், கார், ஆட்டோ, பைக் என பயணத்திற்கான வாகனங்கள் புக் செய்வது என அனைத்து வசதிகளும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சில நேரங்களில் குற்றச்சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் பெங்களூருவில் டாக்ஸி வாகனங்களின் பயன்பாடு அதிகளவில் உள்ள நிலையில், அதில் பயணம் செய்த பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறார். இவர் பிடிஎம் லே-அவுட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை பிரபல தனியார் பைக் டாக்ஸியில் தனது நண்பர் வீட்டுக்கு சென்றுள்ளார். அந்நேரத்தில் அப்பெண் மதுபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது பைக் ஓட்டுநரான சகாபுதீன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அப்பெண்ணை தனது இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் சகாபுதீன் அவரது நண்பருக்கு தகவல் கொடுக்க இருவரும் சேர்ந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது என தெரிவித்து அப்பெண்ணை சகாபுதீனும் அவரது நண்பரும் மிரட்டியதாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
ஆனால் அடுத்த இரு தினங்களில் அப்பெண்ணுக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இதுகுறித்து விசாரித்துள்ளனர். இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவிக்க மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சகாபுதீன், அவரது நண்பர் அக்தர் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவத்தின் போது அக்தருடன் இளம் பெண் ஒருவரும் இருந்ததாகவும், ஆனால் அவர் குற்றம் நடப்பதை தடுக்கவில்லை என தெரிவித்த போலீசார் அந்த பெண்ணையும் கைது செய்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.