தென்காசி மாவட்டத்தில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் சமரசம் பேச அழைத்துச் சென்று காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

Continues below advertisement

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பால் வியாபாரம் செய்து வரும் இவரின் மகளான உமா தென்காசி மாவட்டம் பாறைப்பட்டியில் செயல்படும் தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் பயின்று வந்துள்ளார். அதே இடத்தில் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில் உள்ள கொளக்கட்டான்குறிச்சியைச் சேர்ந்த ராஜேஷ் என்ற நபரும் பயின்றுள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனினும் ராஜேஷ், உமா இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. 

இப்படியான நிலையில் சமீப காலமாக தங்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக உமா ராஜேஷிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார். இப்படியான நிலையில் ஜனவரி 5ம் தேதி காவலர் பயிற்சி பள்ளிக்கு கட்டணம் செலுத்த உமா வந்ததை ராஜேஷ் அறிந்துக் கொண்டார். அப்போது முதலில் செல்போனில் அவரை தொடர்பு கொண்டு சமாதானம் பேச முயன்றுள்ளார். ஆனால் உமா சரியாக பேசாததால் ஒருமுறை உன்னிடம் நேரில் பேச வேண்டும் என சமாதானம் செய்ய ராஜேஷ் அழைத்திருக்கிறார். 

Continues below advertisement

சரி என உமா ஒப்புக்கொண்ட நிலையில் இருவரும் கஸ்தூரி ரங்கபுரம் அருகே இருக்கும் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ராஜேஷ் தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொன்ன நிலையில் மீண்டும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ், உமாவை தாக்கியதோடு மட்டுமல்லாமல் கழுத்தை நெறித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் உமா மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பயந்துபோன ராஜேஷ் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து உமா மயங்கி கிடக்கும் விபரத்தை கூறியுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் உமா உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து ராஜேஷ் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்து உண்மையை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து இரண்டு தரப்பு வீட்டாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஏதேனும் பதற்றமான சூழல் இருக்கக்கூடாது என கருதி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ராஜேஷூக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. 

இதற்கிடையில் காவல்துறையில் ராஜேஷ் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில் நானும் உமாவும் மிக தீவிரமாக காதலித்தோம். ஆனால் அவர் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு நபருடன் பேசி வருவதை அறிந்தவுடன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சில காலமாக பேசாமல் இருந்தோம். அவர் கல்லூரியில் கட்டணம் செலுத்த வந்ததை அறிந்ததும் சமாதானம் பேச அழைத்தேன்.

அங்கு இன்ஸ்டாகிராம் விஷயம் பற்றி பேசியதும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட நான் கோபத்தில் கழுத்தை நெறித்தேன். இதில் உமா மயங்கி விழுந்தாள். நான் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செல்லவில்லை. ஆத்திரத்தில் அப்படி நடந்து விட்டதால் மனசாட்சிப்படி போலீசார் என்னைப் பிடிப்பதற்கு முன் நானே சரணடைந்தேன்" என கூறியுள்ளார்.