செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியில் இளம் பெண்ணை கடத்தி சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.


ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரமௌலி (57). இவரது மகள் ஜமுனா (22). சந்திர மௌலியின் தூரத்து  உறவினரான காரைக்குடி தோண்டி பகுதியை சேர்ந்த சபாபதி (27).  சபாபதி ஜமுனாவிற்கு உறவு முறையில் அத்தை மகன் ஆவார். சபாபதி மற்றும் ஜமுனா ஆகிய இருவரும், சிறுவயதில் இருந்தே நெருங்கி பழகி வந்துள்ளனர். படிப்படியாக இருவரும்  காதலித்தும் வந்துள்ளனர். உறவு முறை என்பதால் குடும்பத்தில் ஒருபுறம்,  எதிர்ப்பு இருந்தாலும் மறுபுறம் இருவரும் காதலிப்பதை குடும்பத்தில்  யாரும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.


இந்தநிலையில்  கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஜமுனா சென்னை வேளச்சேரியில் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.  சென்னை வேளச்சேரியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியராக ஜமுனா பணியாற்றி வந்துள்ளார். தோழிகளுடன் விடுதியில் தங்கிவரும் ஜமுனா, தினமும்  தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு  சென்று வருவது வழக்கமாக உள்ளது.


கசந்த காதல்


இந்தநிலையில், ஜமுனா மற்றும் சபாபதி ஆகிய இருவருக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட துவங்கியுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கிடையே அடிக்கடி சண்டை வந்து விடுவதால் காதல் கசக்க துவங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் ஜமுனா சபாபதியின் நடவடிக்கைகள் பிடிக்காமல், அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. தன்னிடம் ஜமுனா பேசுவதை தவிர்த்ததால் சபாபதி மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.  6 மாதங்களாக அவ்வப்பொழுது சபாபதி  ஜமுனாவிடம் பேச பல்வேறு வகையில் முயற்சி செய்ததாகத் தெரிகிறது.


சதி திட்டம் தீட்டிய அத்தை  மகன்


ஜமுனாவை கடத்த நண்பர்களுடன் சதி திட்டத்தை தீட்டி வந்துள்ளார் சபாபதி. இந்தநிலையில் இன்று வழக்கம் போல் ஜமுனா வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணி புரிவதற்காக சென்று கொண்டிருந்த பொழுது,  4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஜமுனாவை கடத்தி சென்றுள்ளது.  இதனைப் பார்த்த அவரது தோழி உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். ஊழியரை கடத்திச் செல்வது குறித்து தகவல் தெரிந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது.


உஷாரான காவல்துறை


மருத்துவமனை வளாகம் அருகே இருந்த சிசிடிவி காட்சி உதவியுடன்,  கடத்தப்பட்ட வாகனத்தை அடையாளம் காணப்பட்டு அருகில் இருக்கும் காவல் நிலையங்கள் மற்றும்  சோதனை சாவடிகள் உஷார் செய்யப்பட்டது. அதேபோன்று வாகனம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வாய்ப்புள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தன. இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினரும் உஷார் படுத்தப்பட்டனர்.


மடக்கி பிடித்த போலீஸ்


வாகனத்தை வைத்து சோதனை மேற்கொண்டு வந்திருந்த அச்சரப்பாக்கம் காவல்துறையினர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடத்தி சென்ற காரை மறித்து பிடித்தனர். இதனை அடுத்து விசாரணை மேற்கொண்டதில், இளம்பெண் ஜமுனாவை கடத்தி சென்றது சபாபதி, அவரது நண்பர்  ஹரிகரன், அஜய்  மற்றும் ராஜேஷ் ஆகியோருடன் இணைந்து இந்த கடத்தல் சம்பவத்தை சபாபதி அரங்கேற்றியது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவாகி இருப்பது வேளச்சேரி காவல் நிலையம் என்பதால் சம்பந்தப்பட்டவர்களை வேளச்சேரி போலீசாரிடம் அச்சரப்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர்.