திருவள்ளூர் மாவட்டம் களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த வினிதா என்ற பெண்மணி பிரசவத்திற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கடந்த 20-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 22 ஆம் தேதி அவருக்கு மதியம் ஒரு மணி அளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு அடுத்த நாள் அவர் வீட்டுக்கு செல்லவேண்டிய நேரத்தில் மருத்துவமனையில் உள்ள செவிலியர் ஒருவர் ஊசி ஒன்றை எடுத்து வந்து போட்டதாக கூறப்படுகிறது.

 

அவ்வாறு ஊசி போடும் பொழுது இந்த ஊசி எதற்காக போடுகிறீர்கள் இந்த ஊசி எனக்கு தேவை இல்லை என வினிதா மறுத்ததாகவும், ஆனால் இந்த ஊசி முக்கியமான ஊசி என்று  கூறி செவிலியர் சமாதானப் படுத்தியதாகவும் தெரிகிறது. இருந்தும் வினிதா செவிலியர் கூறிய காரணங்களை ஏற்க மறுத்துள்ளார் ஆனாலும், வினிதா நடந்து கொண்டிருக்கும் போதே நிற்க வைத்து ஊசி போட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு ஊசி போட்டதை குறித்து அவருடன் உறவினர்களிடம் வினிதா கூறியதாக அவர்களுடைய உறவினர்கள் கூறுகின்றனர்.



இந்த நிலையில் ஊசி போட்ட சில நிமிடங்களில் மருத்துவமனையிலேயே வினிதா மயக்கமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளித்தும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தினால் உடனடியாக, அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ்  மருத்துவரின் அறிவுறுத்தலின் படி மூலம் சென்னை எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.



இந்த நிலையில் நேற்று மதியம் மாலை மூன்று மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையே உயிரிழப்புக்கு காரணம் என்று வினிதாவின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.



இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த ஊசி எதற்காக போடப்பட்டது ஏன் கட்டாயப்படுத்தி போட்டார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உயிரிழந்த வினிதாவுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை ஒருவர் இருக்கிறார். இது இரண்டாவது பிரசவமாகும். இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிறார் வினிதாவின் கணவர் ப்ரதீப். 



தொடர்ந்து அவரது உடலை வாங்கமறுத்த உறவினர்கள், வனிதாவின் உயிரிழப்பிற்கு மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என குற்றம்சாட்டினர். மேலும் பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த உறவினர்கள் மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். உறவினர்களின் குற்றச்சாட்டால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது