சென்னை பார்த்தசாரதி கோயில் குளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இரவு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளத்தில் பெண் ஒருவரின் உடல் மிதப்பதை அப்பகுதியில் இந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
வேலைக்கு சென்ற இடத்தில் தொடர்பு
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் விஜயலட்சுமி என்பதும், இவர் சென்னை சூளைமேடு கண்ணகி தெருவை சேர்ந்த பெயிண்டர் செல்வத்தின் மனைவி என்பதும் தெரிய வந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி செல்வம் திடீரென மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் செல்வம் விஷம் கலந்த உணவு சாப்பிட்டார் என அறிக்கை அளித்தனர்.
இதனையடுத்து விஜயலட்சுமி தலைமறைவாகியுள்ளார். போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் கைது செய்யப்பட்டார். விஜயலட்சுமியிடம் நடத்திய விசாரணையில், மெட்ரோ ரயில் வேலைக்கு செல்லும் போது ரவுடி முண்டக்கண்ணு என்ற மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், கணவர் செல்வம் வேலைக்கு சென்ற பிறகு மோகனை வீட்டுக்கு அழைத்து இருவரும் தனிமையில் இருப்பதை வழக்கமாக்கி கொண்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் ஒருநாள் வேலைக்கு போகாமல் செல்வம் திடீரென மதியம் வீட்டுக்கு வந்த நிலையில் மோகனுடன் விஜயலட்சுமி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
காட்டிக் கொடுத்த அறிக்கை
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மோகனை பார்க்க முடியாமல் தவித்த விஜயலட்சுமி போனில் அவரை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியுள்ளார். அதன்படி செப்டம்பர் 2 ஆம் தேதி உணவில் விஷம் கலந்து கொடுக்க, இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறந்ததும் மதுபழக்கத்தால் இறந்ததாக விஜயலட்சுமி நாடகமாடியுள்ளார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையால் விஜயலட்சுமி சிக்கிக்கொண்டார்.
இதனையடுத்து விஜி, மோகன் இருவரையும் சூளைமேடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நீண்ட நாட்களாக சிறை தண்டனை அனுபவித்த அவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். நேராக வீட்டுக்கு சென்ற விஜயலட்சுமியை மகள்கள், உறவினர்கள் யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் கடும் மன அழுத்தத்தில் இருந்த அவர், தனக்கு தானே பேசிக் கொள்வது என மனநிலை பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதனைப் பார்த்த மோகனும் விஜயலட்சுமியை வீட்டை விட்டு துரத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்து போன அவர் கடந்த 45 நாட்களாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளத்தில் முன்பு உள்ள மண்டபத்தில் தங்கி பிரசாத உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் தீராத மன அழுத்தம் அவரை தற்கொலைக்கு தள்ளியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்தை மீறிய உறவு குடும்பத்தை இழந்தது மட்டுமல்லாமல் தற்கொலை எண்ணத்தை தேடும் அளவுக்கு சென்றது வேதனையளிப்பதாக விஜயலட்சுமி உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.