விருத்தாசலம் பங்களா தெருவில் உள்ள உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு இளைஞர்கள் சிலர் மது போதையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த இளைஞர்களில் ஒருவர் உணவில் உப்பு இல்லை என கூறியுள்ளார் அதன்பின் அந்த இளைஞர்கள்   உணவகத்தில் உள்ள ஊழியரிடம் சென்று ஏன் உணவில் உப்பு இல்லை என  தகராறு செய்துள்ளனர். உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அந்த இளைஞர்களிடம் மன்னிப்பு கோரியும் அதை இளைஞர்கள் ஏற்காததால்  அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 



அதற்கு பின்னர் வெளியே சென்ற அவர்கள், சிறிது நேரம் கழித்து மேலும் சில நபர்களுடன் உணவகத்திற்குள்  புகுந்து பிர்ச்சனை செய்தனர். அப்போது ஓட்டலில் இருந்த உணவு பொருட்கள், டேபில்கள், சேர்கள், பாத்திரங்களை அடித்து நொறுக்கினர். தடுக்க வந்த பெண் ஊழியர்களையும் கடுமையாக தாக்கினர். இதனால் உணவக ஊழியர்களும் அவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்தனர் ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர். இந்த பிரச்சனை குறித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் உணவக ஊழியர்கள் புகார் அளித்தனர் ஆனால் காவல்துறையினர் அதற்கான விசாரணையை தாமதப்படுத்தினர்.



இந்நிலையில் இளைஞர்கள் உணவகத்தை  அடித்து நொறுக்கும் காட்சிகள் உணவகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவ தொடங்கியது இதற்கு பின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாகக்கொண்டு  ஓட்டல் உரிமையாளர் கணேசன் மகன் உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை முடக்கிவிட்டனர். அதன்படி அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் (24), சையத் இப்ராஹீம் (23), ரஹமத்துல்லா (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அதற்குப்பின்  உணவகத்தில் சாப்பிட்ட சதாம் உசேன் கொடுத்த புகாரின்பேரில் சக்திவேல் (23), கணேசன், (48), சுபாஷ் (22), ஆகிய 3 பேரையும் கைது செய்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



இதேபோன்று கடந்த 3ஆம் தேதி ஜங்ஷன் சாலையில் உள்ள தேநீர் கடையின் உள்ளே புகுந்து இளைஞர்கள் கடையினை அடித்து நொறுக்கினர், இந்த சம்பவத்தின் காட்சி சமூகவலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டாக கொரோனா பேரிடர் காரணமாக உணவகங்களில் சரியான வியாபாரம் இல்லாமல் உணவக உரிமையாளர்கள் நட்டத்தில் உள்ளனர் இப்பொழுது தான் சற்று நிலைமை சீராக ஆரம்பமாகி உள்ளது. ஆனால் அதற்குள் கொரோனா மூன்றாவது அலை வருமென எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இதுபோன்று பிரச்சனைகள் வந்தால் என்ன செய்து எப்படி தங்கள் பிழப்பை நடத்துவது என விருத்தாசலம் உணவக உரிமையாளர்கள் மற்றும் தேநீர் கடை உரிமையாளர்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.