விழுப்புரம் : விழுப்புரம் லட்சுமி நகரில் அதிகாலை நேரத்தில் மது போதையில் அரைக்கால் டவுசர் மட்டும் அணிந்துகொண்டு, கையில் இரும்பு ராடுடன் வீட்டுக்குள் புகுந்து உரிமையாளரைத் தாக்கி திருட முயன்ற நபரை வீட்டின் உரிமையாளர் சாதுர்யமாக வீட்டுக்குள் பூட்டினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

விழுப்புரம் நகரப் பகுதிக்கு உட்பட்ட லட்சுமி நகரில் முருகன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில் முருகனின் வீட்டிற்குள் அரைக்கால் டவுசர் மட்டும் அணிந்துகொண்டு, கையில் இரும்பு ராடுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டிற்குள் புகுந்த அந்த நபர், அங்கிருந்த முருகனை இரும்பு ராடால் தாக்கிவிட்டு வீட்டில் திருட முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முருகன், அந்த நபரிடமிருந்து தப்பித்து வெளியே வந்துள்ளார். பின்னர் சற்றும் தாமதிக்காமல் வீட்டின் வெளிப்புறக் கதவைப் பூட்டியுள்ளார்.

Continues below advertisement

இதனால் வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட அந்த நபரால் வெளியேற முடியவில்லை. இதையடுத்து முருகன் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். வீட்டிற்குள் திருட வந்த நபர் சிக்கியிருப்பதை அறிந்த பொதுமக்கள், அவரைப் பிடித்து வெளியே கொண்டு வந்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் இதுகுறித்து விழுப்புரம் நகர காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் சிக்கிய நபரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என விசாரணையில் தகவல்!

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற நபர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பு என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், முறையாக வேலைக்குச் செல்லாமல் தனது செலவுகளுக்காகத் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிகாலை நேரத்தில் மது போதையில் இரும்பு ராடுடன் வீட்டிற்குள் புகுந்து உரிமையாளரைத் தாக்கி திருட முயன்ற நபரை, வீட்டின் உரிமையாளர் சாதுர்யமாகப் பூட்டி வைத்துப் பொதுமக்கள் உதவியுடன் பிடித்த சம்பவம் விழுப்புரம் லட்சுமி நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விழுப்புரம் நகர போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.