விழுப்புரம்: மனைவியுடன் வைத்திருந்த கள்ளத்தொடர்பை கைவிடாததால் வெட்டிக்கொன்றேன் என்று விவசாயி கொலை வழக்கில் கைதான லாரி உரிமையாளர், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


வாழை தோட்டத்தில் விவசாயி கொலை


விழுப்புரம் அருகே உள்ள தாதம்பாளையத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 39), விவசாயி. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு அதே கிராமத்தில் உள்ள நிலத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்தில் வெட்டுக்காயங்கள் இருந்தன.


இதுகுறித்த தகவல் அறிந்த வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், சத்யராஜை யாரோ வெட்டிக்கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அவரை கொலை செய்தவர்கள் யார், அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக சத்யராஜின் உறவினர்கள், நண்பர்கள், அவரது குத்தகை நிலத்திற்கு அருகில் நிலம் வைத்துள்ளவர்கள் மற்றும் கிராம மக்கள் என பலரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.


கள்ளத்தொடர்பு


இதில் தாதம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீரப்பன் மகனான லாரி உரிமையாளர் சரவணன் (39) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில் அவரது மனைவிக்கும், சத்யராஜிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் சத்யராஜை சரவணன் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டதோடு சரவணனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.


சுடுகாட்டில் மறைந்திருந்த குற்றவாளி 


இந்நிலையில் தாதம்பாளையம் சுடுகாடு பகுதியில் பதுங்கியிருந்த சரவணனை நேற்று முன்தினம் காலை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். விசாரணையில் சத்யராஜை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து சரவணன், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-


போலீசில் பரபரப்பு வாக்குமூலம்


எனது மனைவிக்கும், சத்யராஜிக்கும் கடந்த சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை நான் பலமுறை கண்டித்தும் அவர்கள் இருவரும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் வேலைக்கு செல்லும்போது இருவரும் தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று மதியம், இதுதொடர்பாக நான் எனது மனைவியை கண்டித்தேன். இதனால் எங்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் எனது மனைவி, என்னிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். நான் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. அன்று இரவு 10 மணி வரை ஆகியும் எனது மனைவி, வீட்டுக்கு வரவில்லை. இவர்களது கள்ளக்காதல் விவகாரத்தினால் எனக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டது.


சத்யராஜின் நிலத்தில்தான் அவருடன் எனது மனைவியும் இருக்க வேண்டும் என்று நினைத்த நான், இருவரையும் அங்கு வைத்தே தீர்த்துக்கட்ட முடிவு செய்து கொடுவா கத்தியை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சத்யராஜின் நிலத்திற்குச் சென்றேன். அங்கு எனது மனைவி இல்லை, சத்யராஜ் மட்டும் இருந்தார். அவரிடம் எனது மனைவியுடன் வைத்திருக்கும் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினேன். இதனால் சத்யராஜிக்கும், எனக்கும் கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது சத்யராஜ், என்னை தகாத வார்த்தையால் திட்டினார்.


இதனால் ஆத்திரமடைந்த நான், தான் வைத்திருந்த கொடுவா கத்தியால் சத்யராஜின் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினேன். இதில் அவர் இறந்ததும் நான் ஒன்றும் தெரியாததுபோல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டேன். ஆனால் போலீசார் என்னை எப்படியோ கண்டுபிடித்துவிட்டனர். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது.


லாரி உரிமையாளர் கைது


இதையடுத்து சரவணன் மீது போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அவரிடமிருந்த, கொலைக்கு பயன்படுத்திய கொடுவா கத்தி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் சரவணனை போலீசார், விழுப்புரம் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.