விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், பிரபல ரவுடி ஒருவர் மரக்கட்டையால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

மதுபோதையில் நேர்ந்த விபரீதம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். பிரபல ரவுடியான இவர், நேற்று நள்ளிரவு திருக்கோவிலூர் - கடலூர் சாலையில் உள்ள சரவணப்பாக்கம் கிராமப் பகுதியில் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அவர்களுக்குள் திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியுள்ளது. ஆத்திரமடைந்த கும்பல், மோகன்ராஜை மரக்கட்டையால் தலையில் பலமாகத் தாக்கியதோடு, கத்தியால் அவரது வயிற்றுப் பகுதியிலும் சரமாரியாகக் குத்தியுள்ளது. இதில் நிலைகுலைந்த மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.

Continues below advertisement

ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்

இன்று அதிகாலை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள், தலை, நெற்றி மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலையுண்ட மோகன்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்து வழக்குப் பதிவு செய்தனர்.

கொலையான ரவுடியின் குற்றப் பின்னணி

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையுண்ட மோகன்ராஜ் ஒரு ஆபத்தான குற்றப்பின்னணி கொண்ட பிரபல ரவுடி என்பது தெரியவந்தது. இவர் மீது 2 கொலை வழக்குகள், கொள்ளை வழக்குகள், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

4 பேர் பிடிபட்டனர்

பழைய பகை காரணமாகத் திட்டமிட்டு இந்த கொலை நடந்ததா? அல்லது மதுபோதையில் ஏற்பட்ட உடனடி மோதலில் நண்பர்களே இந்த கொடூரத்தைச் செய்தார்களா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவெண்ணைநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.