விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ஈ.சி.ஆரில் நண்பர்களுக்கு கறி விருந்து வைக்க ஆட்டோவில் ஆட்டை கடத்திய சென்னை போதை கும்பலை பொதுமக்கள் விரட்டிச் சென்று தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். 69 வயதான இவர் 4 ஆடுகளை வளர்த்து வருகிறார். கிருஷ்ணராஜ் வழக்கம்போல் மஞ்சக்குப்பம் பெரியகுளம் அருகில் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி ஆட்டோவில் வந்த ஐந்து வாலிபர்கள் இறங்கினர். ஒரு ஆட்டுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதாக கிருஷ்ணராஜிடம் கூறினர். அவரும் சம்மதம் தெரிவித்தார். அங்கிருந்த கிடாய் ஆட்டுடன் செல்பி எடுத்த அந்த கும்பல் திடீரென ஆட்டை ஆட்டோவில் ஏற்றி சென்னை நோக்கி வேகமாக புறப்பட்டது.
இதனை பார்த்த கிருஷ்ணராஜ் அக்கம்பக்கத்தினரை அழைத்து ஆட்டோவை பிடிக்க சொன்னார். அப்போது அங்கிருந்த ஒரு சிலர் பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று ஆட்டோவை மறித்தனர். ஆட்டை கடத்தியவர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த போலீசார் ஆட்டை கிருஷ்ணராஜிடம் ஒப்படைத்து விட்டு ஐந்து பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரனையில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தினேஸ்வரன் என்பவருக்கு குழந்தை பிறந்ததால் இவரது நண்பர்களான சந்தோஷ், துரபதீன், ராகேஷ், ஆனந்த் ஐந்து பேரும் காலாப்பட்டில் உள்ள தனியார் பாரில் மது அருந்திவிட்டு சென்னைக்கு ஆட்டோவில் திரும்பிய போது நண்பர்களுக்கு கறி விருந்து வைக்க ஆட்டை கடத்தியது தெரிய வந்தது. மேலும் ஐந்து பேரின் உடைமைகளை போலீசார் சோதனை செய்தபோது. ஆனந்த் என்பவர் பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலம் இருந்ததை கண்டுபிடித்தனர். 5 பேரையும் கைது செய்து துரபதீனுக்கு சொந்தமான ஆட்டோவும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்