விழுப்புரம் : கிளியனுார் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கள்ளக்காதலி தனது கணவருடன் இணைந்து கள்ளக்காதலனை அடித்து கொலை செய்து விட்டு சாலையில் வீசி சென்ற குற்றவாளிகளை கிளியனூர் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.


சாலையோரம், சாக்கால் முகத்தை மூடி கட்டிய நிலையில் பிணம்


விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சஞ்சீவி மகன் ருத்ரகுமார் (40) கொத்தனார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற ருத்ரகுமார், இரவு 10:00 மணியளவில், அவரது மொபைல் போனில் நண்பர் அழைப்பதாக மனைவியிடம் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு முழுதும் தேடினர்.


நேற்று அதிகாலை 4:00 மணியளவில், புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச் சாலையில் கேணிப்பட்டு - கீழ்கூத்தப்பாக்கம் இடைப்பட்ட பகுதியில் சாலையோரம், சாக்கால் முகத்தை மூடி கட்டிய நிலையில் கழுத்தில் காயங்களுடன் ருத்ரகுமார் உடல் கிடந்தது. அதன் அருகே அவரது பைக் இருந்தது. தகவல் அறிந்த எஸ்.பி., தீபக் சிவாச், கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில், கிளியனுார் காவல் ஆய்வாளர் பாலமுரளி மற்றும் போலீசார், உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து கிளியனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


கள்ளக்காதல் விவகாரம்


போலீசார் விசாரணையில்... தனஞ்செயன் மனைவி சரஸ்வதி ருத்ரகுமாருடன் கொத்தனார் வேலைக்கு சென்றுள்ளார். அப்பொழுது ருத்ரகுமாருக்கும் தனஞ்செயன் மனைவி சரஸ்வதிக்கும் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் சரஸ்வதியின் கணவர் தனஞ்செயனுக்கு தெரிய வரவே இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் இவர்கள் கள்ளக்காதலை விடாமல் உல்லாச வாழ்க்கையில் இருந்துள்ளனர். இதனைக் கண்டு கோபமடைந்த தனஞ்செயன் சரஸ்வதி இடம் செல்போனை கொடுத்து வீட்டில் யாரும் இல்லை என கூறி ருத்ரகுமாரை வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.


கொத்தனார் ருத்ரகுமார் சரஸ்வதியின் வீட்டுக்குள் வந்ததும், பீரோவுக்கு பின்னால் மறைந்திருந்த தனஞ்செயன் மற்றும் கண்ணன் பூங்கொடி ஆகிய மூன்று பேரும் மறைந்து இருந்து ருத்ரகுமாரை தாக்கினர். தடுமாறி விழுந்த ருத்ரகுமாரை தலையணையால் முகத்தில் அழுத்தி சாகடித்துள்ளனர். ருத்ரகுமாரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அதில் ருத்ரகுமாரை அமர வைத்து புதுச்சேரி- திண்டிவனம் பைபாஸ் தேனிப்பட்டு - கீழ் கூத்தப்பாக்கம் இடைப்பட்ட பகுதியில் சாலை விபத்தில் இறந்தது போல் வைத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி உள்ளனர்.


இச்சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவான நிலையில் போலீசார் நான்குபேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஒரு நான்கு சக்கர வாகனம் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.