விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டின் பூட்டினை உடைத்து திருட முயன்ற நபர் போதை அதிகமானதால் வீட்டிலேயே அரைநிர்வாண கோலத்தில் படுத்திருந்தவரை பொதுமக்கள் கால்களை கட்டிபோட்டு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 


விழுப்புரம் நகர பகுதியான காலேஜ் நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன் என்பவர் குடும்ப திருமண நிகழ்சிக்காக குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் கணேசன் வீட்டின் பின்பக்கத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியினர் தர்ம அடிகொடுத்து கால்களை கட்டி போட்டு அருகேயுள்ள நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் மதுபோதையில் காயங்களுடன் இருந்தவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை செய்தனர். போலீசாரின் விசாரணையில் வீட்டில் யாருமில்லாததை நோட்டமிட்டு திருட வந்த நபர் வீட்டின் பூட்டினை உடைத்துவிட்டு மது போதையில் வீட்டிலேயே படுத்து உறங்கி தள்ளாடி கொண்டு இருந்ததும் பொதுமக்கள் பிடித்த போது கற்களை கொண்டு தாக்கி விட்டு தப்பிக்க முயற்சித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


குறிப்பாக விழுப்புரம் நகர பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வீடுகளை உடைத்து நகை பணம் கொள்ளை அடிப்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் நகர் பகுதியில் வீட்டை உடைத்து நகையை திருடும் என்ற போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். 


இதனால் விழுப்புரம் பகுதியில் தொடர் திருட்டு நாள் பொதுமக்கள் லட்சத்தில் உள்ளனர். மேலும் நகரப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க வேண்டும் எனவும் இரவு மற்றும் பகல் நேரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். 


குறிப்பாக திருட்டுக்களை தடுக்க வேண்டும் என்றால் தற்போது உள்ளே சூழ்நிலைக்கு சிசிடிவி கேமராக்களை பொருத்தினால் மட்டுமே குற்றவாளர்களை கண்டறிய முடியும். எனவே பொதுமக்கள் ஒன்றிணைந்து அவரவர் பகுதியில் சிசிடிவி கேமரா அமைத்தால் திருடு போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை குறைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.