விழுப்புரம் அருகேயுள்ள குண்டலபுலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஈரோட்டைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்காவில் சுயத்தொழில் செய்து வருகிறார். இதனிடையே சலீம்கான் தனது தனியாக வாழ்ந்து வந்த தனது மாமா ஜபருல்லாவை தனது நண்பர்கள் உதவியுடன் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அன்புஜோதி ஆசிரமத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி சேர்த்துள்ளார்.
தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ஈரோடு வந்த சலீம்கான் தனது மாமாவை பார்க்க ஆசிரமத்திற்கு சென்ற நிலையில் அங்கு அவரை காணவில்லை. இதுபற்றி சலீம்கான் ஆசிரம இயக்குநர் அன்பு ஜூபினிடம் கேட்டபோது பெங்களூரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் ஜபருல்லாவை சேர்த்து விட்டதாகக் கூறியுள்ளார். அதன்படி சலீம்கான் பெங்களூரில் உள்ள அந்த ஆசிரமத்திற்கு சென்று பார்த்தபோது, ஜபருல்லா அங்கேயும் இல்லை. இதுபற்றி, சலீம்கான் மீண்டும் அன்பு ஜோதி ஆசிரம இயக்குநர் அன்பு ஜூபினிடம் கேட்ட போது, அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலைத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சலீம் கான் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவு பேரில் கடந்த சில தினங்களுக்கு முன், போலீசாரும், வருவாய்த்துறையினரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
அதாவது கடந்த 18 ஆண்டுகளாக இந்த ஆசிரமம் உரிய அனுமதியின்றி நடந்து வருவது தெரிய வந்தது. மேலும் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், ஆசிரமத்தில் இருக்க வேண்டிய 137 பேரில் 121 பேர் மட்டுமே தற்போது ஆசிரமத்தில் உள்ளதாகவும், 16 பேர் என்ன காணாமல் போனதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆசிரமத்தின் கிளைகளில் இருந்த 33 பெண்கள் மற்றும் 203 பேர் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நேரில் சென்று கேட்டறிந்தனர். மேலும் இதுதொடர்பான புகார் அடிப்படிடையில் அறக்கட்டளை நிர்வாகியின் மனைவி மரியா ஜீபின் உட்பட 8 பேரை கெடார் போலீசார் கைது செய்தனர். குரங்கு தாக்கி காயமடைந்ததாக ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படும் நிலையில், ஜூபினை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.