விழுப்புரம் அருகே பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 38). பிரபல ரவுடியான இவர் திங்கள் கிழமை காலை ஜானகிபுரம் அங்காளம்மன் கோவில் அருகில் தலையில் வெட்டுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற லட்சுமணன் மீது மிளகாய் பொடியை தூவி அவர் தடுமாறி கீழே விழுந்ததும் சரமாரியாக கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், லட்சுமணனை அவரது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் (38), அய்யப்பன் (40), சக்திவேல் (29), இளையராஜா (24) ஆகிய 4 பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சரவணன் உள்ளிட்ட 4 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் இளையராஜா பிடிபட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் விழுப்புரம் பகுதியில் தலைமறைவாக இருந்த சரவணன், அய்யப்பன், சக்திவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் காலை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட லட்சுமணன் மற்றும் சரவணன், அய்யப்பன், சக்திவேல், இளையராஜா ஆகிய 5 பேருமே நண்பர்கள் ஆவர். இவர்கள் 5 பேரும் ஜானகிபுரம் பகுதியில் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். லட்சுமணன் அதே பகுதியில் பாட்டில் கம்பெனி வைத்துள்ளார். சரவணன் உள்ளிட்ட 4 பேரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் கிடைக்கும் பணத்தில் தனக்கும் பங்கு கேட்டு அடிக்கடி லட்சுமணன் பிரச்னை செய்து வந்துள்ளார். அதோடு அந்த பணத்தில் தனக்கு தினமும் மது வாங்கி தரும்படி தொந்தரவு செய்து வந்துள்ளார். அதற்கு சரவணன் உள்ளிட்ட 4 பேரும் தனது நண்பர் லட்சுமணன் தானே மது கேட்கிறான் என்று அவர்களும் அவ்வப்போது மதுவாங்கி கொடுத்துள்ளனர். அவ்வாறு மது குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் லட்சுமணன், தனது நண்பர்களை தகாத வார்த்தையால் திட்டி அடித்து வந்துள்ளார். இதனால் லட்சுமணன் மீது அவரது நண்பர்களுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே சரவணன், லட்சுமணனின் மற்றொரு நண்பர் ஒருவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.
இதுபற்றி அந்த நண்பர், லட்சுமணனிடம் கூறியுள்ளார். உடனே லட்சுமணன், சரவணனை அழைத்து அந்த பெண்ணுடனான கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி கண்டித்துள்ளார். இதன் காரணமாகவும் லட்சுமணன் மீது சரவணனுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் லட்சுமணன் உயிரோடு இருந்தால் நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது, எனவே அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று சரவணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். அதற்கு அவர்களும் ஒப்புக்கொண்டனர். அதன்படி நேற்று முன்தினம் காலை லட்சுமணனை செல்போன் மூலம் தொடர்புகொண்டு மது குடிக்க வருமாறு அவரது நண்பர்கள் அழைத்தனர்.
இதை நம்பிய லட்சுமணன், வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் வரும்போது ஜானகிபுரம் அங்காளம்மன் கோவில் அருகே ஏற்கனவே மறைந்திருந்த சரவணன், அய்யப்பன், சக்திவேல், இளையராஜா ஆகியோர் லட்சுமணன் மீது மிளகாய் பொடியை தூவியுள்ளனர். இதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததும் அவரை சுற்றி வளைத்து கத்தியால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையே போலீசார், வாக்குமூலமாகவும் பதிவு செய்தனர். இதையடுத்து சரவணன், அய்யப்பன், சக்திவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தனர்.