தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே இன்று இவர் வழக்கம்போல  அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை அரிவாளால் கை,தலை.கழுத்து உள்ளிட்ட பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.


லூர்து பிரான்சிஸ் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக  முறப்பநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார் லூர்து பிரான்சிஸை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 


அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சில நாட்களுக்கு முன் லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் போலீசில் புகார் அளித்தது தெரிய வந்தது. மணல் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் தான் இந்த கொலை சம்பவத்திற்கு காரணமாக இருப்பார்கள் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.


இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் வல்லநாடு அருகே உள்ள கலியாவூரைச்  சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவரான மாரிமுத்து என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் புகுந்து அதிகாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் சென்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் செந்தில்ராஜ், ”லூர்து பிரான்சிஸ் மிக நேர்மையான அதிகாரி. ஆதிச்சநல்லூரில் பணியாற்றிய போது அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து மீட்கும் விவகாரத்தில் மிகவும் தைரியமாக செயல்பட்டவர். அவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முறப்பநாடு வருவாய் கிராமத்தில் அவர் பணியாற்றி வந்தார். அவரது மரணத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார் தானும் அந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளேன்” என தெரிவித்தார். 


இந்நிலையில் கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகையும்,  குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.