ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெண் ஒருவர் தனது குழந்தையை இரக்கமின்றி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், அந்த பெண்ணை காவல்துறை கைது செய்துள்ளது. சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட வீடியோக்கள் வைரலாகி வருவதை நாம் கண்டுள்ளோம். அதில் பல மக்கள் ரசிக்கும் வீடியோக்களாக இருந்தாலும், சில வீடியோக்கள், மனதை பதைப்பதைக்க வைக்கும். அதிலும் சிலவற்றை காணும்போது மக்களை கொந்தளிக்க செய்யும். பல வீடியோக்கள் அது போல மனித உரிமை மீறல் செய்யப்பட்டு உடனடி புரட்சி கிளம்பி நீதியும் பெற்றுத்தரப்பட்டுள்ளது. அதுபோல ஒரு வீடியோ திடீரென வைரலாகி அதனை பார்த்த ஒருவர் அதன்மூலம் பாதிக்கப் பட்டு, காவல்துறையில் புகார் அளிக்க, அதில் சம்மந்தப்பட்டவரை கைது செய்யப்பட்ட சம்பவம் ஜம்மு காஷ்மீரில் நடந்துள்ளது. 


ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஒன்பது மாதக் குழந்தையை இரக்கமின்றி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் சில நாட்களாக வைரலாக பரவி வந்துள்ளது. இந்த வீடியோ காண்போர் இடையே அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. இந்த கொடூர செயலுக்கு அந்த பெண் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்த நிலையில் அந்த பெண்ணை காவல்துறை கைது செய்துள்ளது. இதயத்தை உலுக்கும் இந்த வீடியோ அவரது உறவினரால் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.






அந்தப் பெண் குழந்தையைத் தாக்குவது, அறைவது மற்றும் கட்டிலில் தூக்கி வீசுவது போன்றவற்றை அந்த வீடியோவில் காண முடிகிறது. வீடியோவைப் பார்த்த சம்பா மாவட்டத்தின் பிரி கமிலா பகுதியின் சர்பஞ்ச் முக்தியார் சிங்குடன் அவரது கணவர் உடனடியாக காவல்துறையை அணுகி வழக்கு பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தையை அவரது கணவரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் சம்பா மாவட்ட காவல் அதிகாரி அபிஷேக் மகாஜன் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்டார். அந்த வீடியோ எடுக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது என்றும், அது இப்போது யாராலோ பகிரப்பட்டு வைரலாகி உள்ளது என்று கூறி உள்ளார்.