நள்ளிரவில் ஆண் நண்பருடன் ஆட்டோவில் பயணித்த பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களிடம் இருந்து செல்போன், பணம் மற்றும் நகையை பறித்த சம்பவம் வேலூரில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு 2 இளைஞர்கள் போதையில் ஒருவருக்கொருவரை தாங்களே தாக்கி கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது, அந்த 2 இளைஞர்களும் இதற்கு முன் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது .
இதையடுத்து, முழு போதையில் இருந்த 2 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்ற காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போதையில் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில், 2 மைனர் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வந்தனர்.
தொடர்ந்து, நேற்று மத்தியம் வேலூர் எஸ்.பி அலுவலகத்துக்கு ஈ மெயில் மூலம் ஒரு புகார் மனு வரப்பெற்றுள்ளது. அந்த புகாரில் ஒரு பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பரும் கடந்த 16 ம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்து விட்டு நள்ளிரவு 1.00 மணியளவில் வெளியே வந்துள்ளனர். தொடர்ந்து, இவர்கள் இருவரும் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறியதாவும் , அந்த ஆட்டோ போகும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றதாகவும், தாங்கள் அதை கேட்டபோது அந்த ஆட்டோவில் வந்த 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்தி சென்றுள்ளனர். மறைவாக அழைத்துச்சென்ற தங்களிடமிருந்த செல்போன்கள், சுமார் ரூ . 40 ஆயிரம் பணம் மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துக் கொண்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர்கள் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் , எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் இ மெயில் மூலம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக காவல்துறை கைதானவர்களிடம் மேலும் விசாரிக்கையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”வேலூர் காட்பாடியில் திருவலம் சாலையில் உள்ள திரையரங்கில் கடந்த 16-ம் தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் ஒருவரும் இரவு காட்சி முடிந்து இரவு 12.30 மணிக்கு மேல் 2 பேரும் தியேட்டர் முன்பு ஆட்டோவுக்காக காத்து நின்றனர். இவர்களை நோட்டமிட்ட 4 பேர் ஒரு ஆட்டோவில் அங்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்த 2 பேரிடம் எங்க செல்ல வேண்டும் என கேட்டு இது சேர் ஆட்டோ தான் ஏருங்க என கூறியுள்ளனர்.
ஆட்டோ ஓட்டிய டிரைவர் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டார். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளர். ஏற்கனவே ஆட்டோவில் 4 பேர் இருந்த நிலையில், ஆட்டோவில் இருவரும் ஏறியதும் காட்பாடியில் இருந்து வேகமாக வந்த ஆட்டோ கிரீன் சர்க்கிள் வந்ததும் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை நோக்கி திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பரும் இங்கே ஏன் செல்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அதற்க்கு ஆட்டோ ஓட்டுனர், இவ்வழியில் சாலையை மறைத்து வேலை நடக்கிறது அதனால் சுற்றி போகிறோம் என கூறினர். சர்வீஸ் சாலையில் பாய்ந்து சென்ற ஆட்டோ பாலாற்றின் கரைக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் ஊழியர் மற்றும் அவரது நண்பர் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதுவரை அமைதியாக இருந்த கும்பல் திடீரென கத்திமுனையில் பெண் ஊழியரை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர்களிடமிருந்து செல்போன்கள், ஏ.டி.எம். கார்டை பிடுங்கி சென்று ஒரு ஏடிஎம்மில் பணத்தை எடுத்து சென்றாதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து பெண் ஊழியர் மற்றும் அவரது ஆண் நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறாத இந்த நிலையில் தான் சத்துவாச்சாரியில் நேற்று முன்தினம் ரவுடி கும்பல் ஒன்று தகராறில் ஈடுபட்டு காவல் துறையில் பிடித்த பின்புதான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கைதான இளம் சிறார் உட்பட நான்கு பேரிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, எஸ்.பி ராஜேஷ் கண்ணண் உத்தரவின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.