வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுகார தெருவை சேர்ந்தவர் அம்ரோஸ் (24). ஆட்டோ ஓட்டுனரான இவர் நேற்று அதே பகுதியில் தெருவோரம் நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த கலீம் என்பவர் பைக்கில் வந்துள்ளார். அவரது பைக் டயரில் இருந்து தெறித்த சகதி அம்ரோஸ் மீது பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் அங்குள்ள பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்
இதனைத் தொடர்ந்து கார் ஓட்டுனர் கலீம் சுருட்டுக்கார தெருவில் உள்ள அவரது வீட்டு முன்பு வழக்கம் போல் பைக்கை நிறுத்திவிட்டு முதல் மாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். அதே வீட்டில் கீழ்ப்பகுதியில் நைமுதீன் வயது (30) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 1 மணிக்கு மது போதையில் 3 பேர் கொண்ட கும்பலாக கலீம் வீட்டை தேடி அங்கு வந்த அம்ரோஸ், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரது வீட்டு நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். அதில் அங்கிருந்த பைக் ஒன்று எரிந்தது. வீட்டின் சுவரிலும் தீப்பற்றியது.
என்னிடம் மோதினால் இது தான் கதி என கர்ஜித்த அம்ரோஸ், முன்பு நடந்த முன்பகையை தீர்த்த சந்தோசத்தில் ஆர்ப்பரித்திருக்கிறார். கலீமிற்கு அது எதுவுமே தெரியாத நிலையில், கீழ் வசிக்கும் நைமுதினின் குடும்பத்தாருக்கு சத்தம் கேட்க, வெளியே வந்து அவர்கள் கூச்சல் போட, அக்கம் பக்கத்தினர் ஓடி வர, அவர்களை பார்த்து அம்ரோஸ் மற்றும் அவரது கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.
அதன் பிறகு தான் தெரிந்தது, அம்ரோஸ் அன் டீம் பெட்ரோல் குண்டு வீசியது கலீம் வீட்டில் அல்ல, நைமுதின் வீட்டில் என்பது. அதில் எரிந்த பைக்கும் நைமுதினுடையது. பாதிக்கப்பட்ட வீட்டில் பகுதிகளும் அவர்களுடையதே. இச்சம்பவம் குறித்து நைமுதினின் குடும்பத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர் . தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பெட்ரோல் குண்டு வீசிய அம்ரோஸ் மற்றும் அவருடைய கூட்டாளிகளான யூசுப், அப்துல்லா ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அவர்கள் மூவரையும் சுற்றி வளைத்த தனிப்படை போலீசார், கையும் களவுமாக பிடித்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர். ஒரு சாதாரண விவகாரத்திற்காக பெட்ரோல் குண்டு வரை சென்றதும், அதை சம்மந்தமே இல்லாமல் வேறு ஒருவர் வீட்டில் வீசியதும் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.