கல்யாண சத்திரத்தில் திருமணம் நடத்தியதற்காக தலித் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

தலைக்கேறிய சாதி வெறி:

சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டை கற்பிக்கும் சாதிய அமைப்புக்கு எதிராக பல தலைவர்கள் தீவிரமாக இயங்கிய நிலையிலும், தற்போது வரை அதன் தாக்கம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. 

இந்த நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் ராஸ்ரா பகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருமண மண்டபத்தில் திருமண விழாவை நடத்தியதற்காக தலித் குடும்பத்தை கும்பல் ஒன்று தடிகளை கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு நடந்துள்ளது. இதில், இருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

கல்யாண சத்திரத்தை பயன்படுத்த எதிர்ப்பு:

இதுகுறித்து காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், "தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்துவிட்டு எப்படி ஒரு மண்டபத்தில் திருமணத்தை நடத்த முடியும்? என கேட்டுவிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யலில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் சகோதரரான ராகவேந்திர கௌதம் அளித்த புகாரில், "சுமார் 20 பேர் கொண்ட குழு, தடிகளை எடுத்து வந்து, இரவு சுமார் 10:30 மணியளவில் திருமண மண்டபத்திற்குள் நுழைந்தது. திருமணத்தில் கலந்து கொண்டவர்களைத் தாக்கியது.

இந்தக் குழுவிற்கு அமன் சாஹ்னி, தீபக் சாஹ்னி, ராகுல் மற்றும் அகிலேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். இவர்களுடன் அடையாளம் தெரியாத 15-20 பேர் கொண்ட நபர்கள் வந்தனர். வந்தவர்கள், சாதிய வசைவுகளை சொல்லி திட்டியதாகவும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமண மண்டபத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கௌதமின் உறவினர்களான அஜய் குமார் மற்றும் மனன் காந்த் ஆகியோர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.