பரோலில் சென்ற பாலியல் குற்றவாளி 33 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பாலியல் குற்றவாளி, 33 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் நகரில் கைது செய்யப்பட்டார். 56 வயதான ரகுநந்தன் சிங், தனது மனைவியுடன் போலி அடையாளத்துடன் வாழ்ந்து, ஆடை விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை கைது செய்பவருக்கு ரூ.25,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஹத்ராஸ் காவல் கண்காணிப்பாளர் வினீத் ஜெய்ஸ்வால் கூறுகையில், 1987இல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ரகுநந்தன் சிங், தனது மனைவியுடன் 30 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து, நகரத்தில் உள்ள ஒரு ஆடை விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “அவர் ஒரு பாலியல் குற்றவாளி. தண்டனை அனுபவிக்கும் போது பரோல் வழங்கப்பட்டது. பரோலில் வந்த கடந்த 33 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 1986 ஆம் ஆண்டு, அவர் மீது மாவட்டத்தில் உள்ள ஹத்ராஸ் சந்திப்பு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு, அவர் உள்ளூர் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டில், அந்த நபர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். பின்னர் அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார். ஆனால் வெளியே வந்த பிறகு, அவர் கிராமத்தில் உள்ள தனது அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் அனைத்தையும் விற்றுவிட்டு தலைமறைவானார். பின்னர் புதிய போலி அடையாளத்துடன் டெல்லிக்கு சென்று திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். டெல்லியில் உள்ள புராரி பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தார். அவரை கைது செய்ய உயர்நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்தது” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “அவரைக் கைது செய்பவருக்கு ரூபாய் 25,000 பரிசு அறிவித்தேன். மேலும் அவரைக் கண்டுபிடிக்க சிக்கந்திர ராவ் வட்டாரத்தின் வட்ட அதிகாரி தலைமையில் பல குழுக்களை அமைத்தேன். சிறப்பு செயல்பாட்டுக் குழுவும் இணைக்கப்பட்டது” என்று கூறினார். ரகுநந்தன் சிங்கின் சொந்த கிராமத்தில் வசிப்பவர்கள், உறவினர்கள் அவர் 1989 இல் காணாமல் போன பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லாததால் அவர் இறந்துவிட்டார் என்று நம்பினர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் உள்ளூர் காவல்துறை தேடியபோது, சிங் இறந்துவிட்டதாக கிராமத் தலைவர்கள் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். ஆனால் அவர் கைது செய்யப்பட்ட செய்தி கிராம மக்களையும் அவரது உறவினர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹத்ராஸ் சந்திப்பு போலீஸ் நிலைய அதிகாரிகளால் இந்த வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்