Video: பைக்கில் சென்ற இஸ்லாமிய பெண்-இந்து ஆண்: திடீரென தாக்குதல் நடத்திய கும்பல்!

உத்தர பிரதேசத்தில் ஒன்றாக சென்ற இஸ்லாமிய பெண் மற்றும் இந்து ஆண் ஆகிய இருவரையும் கும்பலானது தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

உத்தரபிரதேச மாநிலத்தில், ஒரு கும்பலானது  ஒரு இஸ்லாமிய பெண்ணை பொது இடத்தில் தாக்கி, அவரது புர்கா ஆடையை அகற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தின் போது,  இஸ்லாமிய பெண் ஒரு இந்து ஆணுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது, அவர்கள் மீது தாக்குதல் மீது நடத்த காரணம் என தகவல் தெரிவிக்கின்றன. 

Continues below advertisement

உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் கலபார் என்கிற பகுதியில் 20 வயதான இஸ்லாமிய பெண்ணும்,  இந்து ஆணும் இருசக்கர வாகனத்தில் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை பார்த்த எட்டு முதல் பத்து ஆண்களைச் சேர்ந்த கும்பலானது, அவர்களை உடல் ரீதியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த முழு சம்பவத்தையும் அருகில் இருந்த ஒருவர் தனது செல்போன் கேமரா மூலம் படம் பிடித்தார். இதையடுத்து,  அந்த வீடியோவானது சமூக ஊடகங்களில் வெளியாகி பலரும் பார்த்தனர். அந்த வீடியோவில், கும்பல் அவர்களைச் சூழ்ந்துகொண்டு அந்தப் பெண்ணைத் தாக்குவதைக் காட்டுகிறது. வீடியோவில், சில ஆண்கள் அந்தப் பெண்ணின் புர்காவை இழுப்பதையும் பார்க்க முடிகிறது. மேலும், அங்கிருந்த அந்த ஆணையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இஸ்லாமிய பெண்ணும், இந்து ஆணும் ஒன்றாக இரு சக்கர வாகனத்தில் சென்றதால், தாக்குதல் நடத்தியதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், குற்றம் சாட்டபட்டவர்களை காவல்துறை அழைத்துச் செல்வது போன்று மற்றொரு வீடியோ காண்பிக்கிறது. அதில், அவர்கள் நடக்க முடியாமல் செல்வதையும் பார்க்க முடிகிறது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, “  காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சட்டத்தை யாரும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் காவல்துறை கூறியுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. 

Also Read: இஸ்லாமியரை தலைவராக்கு முடியுமா என காங்கிரசுக்கு மோடி சவால்! காங் சொன்னது என்ன?

மேலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல், வாய்மொழி துஷ்பிரயோகம் மற்றும் சாதி அடிப்படையிலான அவதூறுகள் உள்ளிட்ட குற்றங்களுக்காக பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முசாபர் நகரில் மத ரீதியாக வகுப்புவாத பதற்றங்கள் நிறைந்த பகுதி என கூறப்படும் நிலையில், இந்த  சூழலை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை தீவிரமாகக் கருதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பு உறுதியளித்துள்ளது.

Also Read: பஞ்சாயத்து முடிஞ்சது போங்க! இபிஎஸ்-க்கு சமாதான கொடி காட்டிய செங்கோட்டையன்: நடந்தது என்ன?

இந்நிலையில், இந்த சம்பவமானது சமூக ஊடகங்களில் பரவலாக சீற்றத்தைத் தூண்டியுள்ளது, மேலும் பலர் இந்த செயலை தனிமனித உரிமை மீதான தாக்குதல் என்றும் மற்றும் வகுப்புவாத வெறுப்பின் வெளிப்பாடு என்று கண்டித்துள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola