UP Crime: அடுத்த சில மாதங்களில் திருமணமாக இருந்த இளம் பெண், சகோதரனாலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தங்கையை கொன்ற அண்ணன்

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த நபர், பணத்திற்காக சொந்த தங்கையையே கொலை செய்துள்ளார். கோணிப்பையில் வைத்து உடலை அப்புறப்படுத்த முயன்றபோது, போலீசார் சோதனையில் சிக்கியுள்ளார். ஆனால், அது வெறும் கோதுமை மூட்டை என கூறி தப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தந்தைக்கு கிடைத்த இழப்பீட்டுத் தொகையில் தனக்கான பங்கை கேட்டும் வழங்காமல், மொத்த பணத்தையும் தங்கையின் திருமண செலவிற்கே பயன்படுத்த முயன்றதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Continues below advertisement

ரூ.6 லட்சத்திற்காக கொலை:

சாலைத் திட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தியதற்காக, சின்கு நிஷாத் என்பவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு கிடைத்துள்ளது. அதனை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே, சின்குவின் மகனான முப்பத்திரண்டு வயதான ராம் ஆஷிஷ் நிஷாத், தனது 19 வயது சகோதரி நீலத்தைக் கொலை செய்துள்ளார். தந்தையின் நிலத்திற்கு கிடைத்த பணத்தை முற்றிலுமாக தனது சகோதரியின் திருமணத்திற்குப் பயன்படுத்தப்பட்டதால் அவர் வருத்தமடைந்ததாகக் கூறப்படுகிறது.

விசாரணையில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, நீலத்தை துணியால் கழுத்தை நெரித்து ராம் கொலை செய்துள்ளார். பின்பு தங்கையின் கைகால்களை உடைத்து, உடலை ஒரு சாக்குப்பையில் அடைத்து, அதை தனது பைக்கில் கட்டியுள்ளார்.  பின்னர் கோரக்பூரிலிருந்து கிட்டத்தட்ட 70 கி.மீ தொலைவில் உள்ள குஷிநகரில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் அந்த பையை வீசி உடலை அப்புறப்படுத்தியுள்ளார்.

போலீசாரிடம் சிக்காத ராம்:

உடலை அப்புறப்படுத்த பைக்கில் செல்லும்போது, வழியில் ஒரு இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பையில் என்ன இருக்கிறது என அவர்கள் கேட்க, அது வெறும் கோதுமை என ராம் கூறியுள்ளார். அதனை ஏற்று, எந்தவித சோதனையையும் நடத்தாமல் போலீசாரும் அனுமதித்துள்ளனர். அதன் காரணமாக குஷிநகர் வரை சென்று ராம் தனது சகோதரியின் உடலை வீசிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

தந்தையின் சந்தேகமும்..தகவலும்..

மகள் நீலம் வீட்டில் இல்லாத நிலையில் அவள் சத் பூஜைக்கு சென்றிருக்கக் கூடும் என அவரது தந்தை கருதியுள்ளார். ஆனாலும்,  திங்கட்கிழமை ராம் ஒரு பையுடன் வீட்டை விட்டு வெளியேறியதை அக்கம்பக்கத்தினர் தெரிவித்ததைத் தொடர்ந்து, குடும்பத்தினர் சந்தேகமடைந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், நீலம் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். செவ்வாயன்று, நீலமின் குடும்பத்தினர் ராம், தனது 19 வயது சகோதரியை கொலை செய்ததாகக் கூறி போலீசில் புகார் அளித்தனர்.

அம்பலமான உண்மை..

விசாரணையின் போது, ​​ராம் ஆரம்பத்தில் தனக்கு எதுவும் தெரியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால், போலீசாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், முன்னுக்கு பின் முரணாக பேசி, தங்கையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவர் அளித்த தகவலின் பேரில், நீலமின் சிதைந்த உடல் புதன்கிழமை இரவு குஷிநகர் பகுதியில் உள்ள வயலில் இருந்து மீட்கப்பட்டது. அந்த பெண்ணுக்கு வரும் ஜனவரி மாதம் திருமணம் செய்ய குடும்பத்தினர் திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.