சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம்.காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி- டெய்சி ராணி தம்பதியர். இவரது மகனுக்கு வயது 6. பெரம்பூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறார். மாணவன் சரியாக எழுதவில்லை என்று கூறி அவரது பள்ளி ஆசிரியை பிரான்சி உள்ளிட்ட ஆசிரியர்கள்  கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், பள்ளியில் இருந்த சச்சினை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்கு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும், தனது மகனை தாக்கிய பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திரு.வி.க. நகர் போலீசில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இது குறித்து மாணவனின் தாயார் டெய்சி ராணி ABP நாடு இணையதளத்திற்கு அளித்த  பேட்டியில், எனது மகனுக்கு எழுத்துக்கள் எழுதுவதில் சற்று சிரமம் இருந்ததால் தினமும் அவனது ஆசிரியர்கள் கண்டித்து வந்துள்ளனர். இதனால் டீச்சர்ஸ் அடிப்பதாக  சச்சின் கூறி வந்தான். நான் ஆசிரியர்களிடம் நேரில் சென்று அடிக்காமல் அன்பாக பேசிப்புரிய வைத்தால் புரிந்து கொண்டு அழகாக எழுதுவான் என்று கூறிவிட்டு வந்தேன். இந்த நிலையில் எனது மகன் மூச்சு திணறலுடன் பள்ளியில் இருந்ததாக எனக்கு தகவல் வந்தது.

 

அதை தொடர்ந்து அவசர அவசரமாக சென்ற நான் அவனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தேன். அங்கு அவனுடைய பல்ஸ் குறைந்ததால் மேல் சிகிச்சைக்கு தனியார் மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். இது குறித்து திரு.வி.க காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையிலும் போலீசார் பள்ளிக்கு சாதகமாகப் பேசி வருவது வருத்தம் அளிப்பதாக டெய்சி ராணி தெரிவித்தார். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கும் தனது மகனுக்கு நடந்த மாதிரி வேறு யாருக்கும் இனி நடைபெற கூடாது என்று கூறினார்.