சார்ஜாவில் இருந்து கோவை இடையே ஏர் அரேபியா விமான இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் கடந்த 6 ம் தேதியன்று உகாண்டா நாட்டை சேர்ந்த சான்ரா நாண்டேசா என்ற 33 வயது பெண் கோவைக்கு வந்து உள்ளார். கோவை விமான நிலையத்தில் விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கமான சோதனை செய்தனர். அப்போது உகாண்டா நாட்டில் இருந்து வந்த சான்ரா நாண்டேசாவின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சான்ரா நாண்டேசா பிடித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 




அப்போது அந்த பெண் திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறையினரை சந்திக்க வந்ததாக தெரிவித்து உள்ளார். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதால், அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திய போது, அந்த பெண்ணின் வயிற்றில் போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பெண்ணை ஸ்கேன் செய்து பார்த்த போது, போதை பொருளை மாத்திரை கேப்சூலில் அடைத்து விழுங்கி வயிற்றில் மறைத்து கடத்தி வந்தது அம்பலமானது.  




இதனையடுத்து உகாண்டா நாட்டு பெண்ணை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக போதைப் பொருளை மீட்கும் பணிகள் நடந்து வந்தன. போதைப்பொருள் வயிற்றில் கரையாதவாறு மாத்திரையாக மாற்றி விழுங்கி கடத்தப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் அப்பெண்ணின் வயிற்றில் இருந்து 81 கேப்சூல்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அதனை ஆய்வு செய்த போது, MERTHA MPHETAMINE மெத்தபேட்டைமன் என்ற போதை மருந்தை கடத்தி வந்ததும், இதன் மதிப்பு 4 கோடி ரூபாய் என்பதும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. 




நேற்று கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சாண்ட்ரா நாண்டெசா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த போதைப் பொருள் கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது? யாருக்காக போதைப் பொருள் கடத்தப்பட்டது? உள்ளிட்ட விபரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் சாண்ட்ரா நாண்டெசாவை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து,  கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சாண்ட்ரா நாண்டெசாவை வருகின்ற 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க தனி நீதிபதி லோகேஸ்வரன் உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட சாண்ட்ரா நாண்டெசா வெளிநாட்டவர் என்பதால் சென்னை புழல் சிறைக்கு கொண்டுச் செல்ல காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.