Delhi Crime : டெல்லியில் அதிகாலையிலேயே இளம்பெண்கள் இரண்டு பேர் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் சமீப காலமாகவே பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. டெல்லியில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து, சமீபத்தில் நடுரோட்டில் 16 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் 21 முறை கத்தியால் குத்தியது அனைவரையும் கதிகலங்க வைத்திருந்தது. இப்படி நாளுக்கு நாள் ஒரு குற்றச் சம்பவங்கள் டெல்லியில் அரங்கேறி வருகிறது. அந்த வரிசையில் இன்று அதிகாலையிலேயே மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் காவல்நிலையத்திற்குட்பட்ட அம்பேத்கர் பஸ்தி பகுதியில் அதிகாலை 4.30 மணியளவில் மர்ம நபர்கள் இரண்டு துப்பாக்கிகளுடன் நுழைந்தனர். அப்போது, ஒரு வீட்டிற்கு வெளியே நின்று ஒரு நபருடன், இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் நீடித்த நிலையில், ஒருவரைக்கொருவர் அடித்துக் கொண்டனர். பின்னர், கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சம்பந்தப்பட்ட நபரை சுட முயன்றனர்.
அப்போது குறி தவறி அருகில் இருந்த இரண்டு இளம்பெண்கள் மீது குண்டு பாய்ந்தது. இதனால் இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். பின்னர், இரண்டு இளம்பெண்களையும் சுட்டுவிட்டு அங்கிருந்து அந்த மர்மநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இருவர் உயிரிழப்பு
உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு இளம்பெண்களையும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக எஸ்.ஜே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவ குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது, துப்பாக்கியால் சுடப்பட்ட இருவரும் பிங்கி(30), ஜோதி(29) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் உயிரிழந்த இரண்டு இளம்பெண்களின் சகோதரரை பார்க்க வந்ததாகவும், இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பணத்தை கேட்பதற்காக உயிரிழந்த பெண்களின் சசோதரரிடம் பேச வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது அருகில் இருந்த இரண்டு பெண்கள் மீது தவறுதலாக குண்டு பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பெண்கள் சுடப்பட்டு உயிரிழந்த ஏரியா தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.