தலைநகர் டெல்லியில் துவாரகா செக்டார் 9ல் இரண்டு தெரு நாய்கள் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர், இது நம்பமுடியாது செயல். இப்படியான செயலை செய்வதை விடுங்கள் இதை நினைத்துப் பார்க்கக் கூட எப்படி முடிகிறது என்று தெரியவில்ல்லை. இந்தப் படத்தைப் பார்க்கும்போது இதை செய்த குற்றவாளிகளுக்கும் இதே நிலை ஏற்பட வேண்டும் அப்போது தான் நீதி நிலைநாட்டப்படும் என்று தோன்றுகிறது.






மிஸ்டிக் மிரேஜ் என்ற பேஸ்புக் ஐடியில் பகிரப்பட்ட தகவலில், 3 மாதங்கள் நிறைந்த 2 நாய்க் குட்டிகள் தூக்கில் தொங்கவிடப்பட்டு கொல்லப்பட்டுள்ளன. இவை தனது தாயுடன் துவாராகா டெல்லி பகுதியில் ஆசாத் ஹிந்த் அபார்ட்மண்ட்ஸ் அருகே உள்ள காலி இடத்தில் வசித்து வந்தன, இந்த குட்டிகளின் தாய் கருத்தடை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் அதன் ஆறு குட்டிகளில் இரண்டு குட்டிகளை யாரோ விஷமிகள் தூக்கிலிட்டு கொலை செய்துள்ளனர். இந்த நாய்கள் அனைத்துமே தடுப்பூசி செலுத்தப்பட்டு, டீவார்ம் செய்யப்பட்டு நன்கு உணவளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இரண்டு குட்டிகள் கொலை செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள குட்டியை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளோம் என்று பதிவிட்டிருந்தார்.


இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


உத்தரப்பிரதேசத்தில் இரண்டு பேர் மது அருந்தியபோது சாப்பிட எதுவும் கிடைக்காமல், போதையில் அருகில் நின்ற நாய்களின் வால், காதுகளை அறுத்து சாப்பிட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகுவதற்குள் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.


உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்திலிருக்கும் ஃபரித்பூர் என்ற இடத்தில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்திருக்கிறது. முகேஷ் வால்மீகி என்பவரும், அவரின் நண்பரும் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். மது அருந்த சைட்டிஷ் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் அவர்கள் அருகில் இரண்டு நாய்கள் ஏதாவது சாப்பிட கிடைக்காதா என்ற ஆசையில் வந்து நின்றிருக்கின்றன. உடனே முகேஷும், அவரின் நண்பரும் சேர்ந்து ஒரு நாயின் வாலை அறுத்தனர். அந்த நாய் ரத்தத்தோடு தப்பியோடியது. உடனே மற்றொரு நாயின் காதை அறுத்தனர். காது, வால் ஆகிய இரண்டையும் உப்பில் முக்கி எடுத்து சாப்பிட்டுக்கொண்டே இருவரும் மது அருந்தினர். அவர்களின் இந்தச் செயலை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் தீரஜ் பதக் என்பவர் இது குறித்து உள்ளூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.