மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது காதலனுடன் வாக்கிங் சென்ற இளம் பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.


மகாராஷ்டிராவின் பால்கர் விரார் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் தனது காதலனுடன் ஜிவ்தானி கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கே அவர் கோயிலுக்கு அருகே இருந்த மலைப்பகுதியில் காதலனுடன் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அவர்களை இருவர் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். அந்தப் பெண்ணின் காதலன் கைகலப்பில் ஈடுபட மற்ற இருவரும் சேர்ந்து அவரது சட்டையைக் கிழித்து சரமாரியாக அடித்துள்ளனர். அப்பெண்ணின் காதலனை அடித்துப்போட்டுவிட்டு அப்பெண்ணை இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அங்கிருந்து படுகாயங்களுடன் ஓடிவந்த அந்த இளைஞர் ஊர்க்காரர்களிடம் தன் காதலிக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிச் சொல்ல அவர்கள் போலீஸுக்கு தகவல் சொல்ல போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக அப்பெண் போலீஸில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்படி விரார் பகுதியைச் சேர்ந்த தீரஜ் ராஜேஷ் சோனி, யாஷ் லக்‌ஷ்மண் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் தான் பாலியல் வன்கொடுமை குற்றத்தை செய்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் இருவருமே போதைக்கு அடிமையானவர்கள் என்றும் சம்பவத்தன்றும் அவர்கள் போதை வஸ்துகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் விரார் காவல் நிலைய மூத்த காவல் அதிகாரி ராஜேந்திரா காம்ப்ளே தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மார்ச் 27 ஆம் தேதிவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள்:


நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம் ஆகும். கரோனா பேரிடர் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-ல் 3.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது, 2019-ல் பதிவான 4.05 லட்சம் வழக்குகளைவிட 8.3% குறைவாகும்.


கடந்த 2021-ல் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளில், கணவரால் அல்லது உறவினர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட வழக்குகளின் பங்கு 31.8% ஆக (1.36 லட்சம்வழக்குகள்) இருந்தது. இது, முந்தைய 2020 உடன் ஒப்பிடுகையில் 2% அதிகம்.


கணவர் அல்லது நெருங்கிய சொந்தங்களால் பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் பங்கு 2020-ல் 30 சதவீதம் ஆகவும், 2019-ல் 30.9% ஆகவும் இருந்தன.


பாலியல் வன்கொடுமை:


தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட முந்தைய புள்ளிவிவரங்கள் நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பு நிலையை படம்போட்டுக் காட்டுவதாக அமைந்தது. அந்த அறிக்கையின்படி, 2021-ல் பெண்களை குறிவைத்து தாக்கப்பட்டது தொடர்பான வழக்குகளின் பங்கு 20.8% ஆகவும், அதைத்தொடர்ந்து கடத்தல் (17.6%), பாலியல் வன்முறை (7.4%) ஆகிய பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளும் கணிசமான அளவில் இருந்தன.


2020-ல் பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குகளில் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளின் பங்கு 7.5 சதவீதம் ஆகவும், 2019-ல் இது 7.9% ஆகவும் இருந்தன.


எண்ணிக்கைஅடிப்படையில் கடந்த 2021-ல் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 31,677 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், பாதிக்கப்பட்ட பெண்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் 3,038 பேரும். 6-12 வயது வரையில் 183 பேரும், 6 வயதுக்கும் குறைவானோர் 53 பேரும் அடங்குவர்.