திருச்சி மாவட்டம், வயலூர் ரோடு குமரன்நகர் பஸ் நிறுத்தம் அருகே ரத்னா மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அல்லித்துறை சாந்தபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமியின் மகள் நிவேதாலட்சுமி (வயது 19) நர்ஸாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று காலை, இவர் வழக்கம் போல் பெற்றோரிடம் கூறிவிட்டு வேலைக்கு சென்றார். அங்கு அவர் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தார். அதன்பின் மதியம் 3 மணி அளவில் நிவேதாலட்சுமி மருத்துவமனையின் 5-வது மாடிக்கு படி வழியாக ஏறி சென்றார். இதைத்தொடர்ந்து அவர் திடீரென்று 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அப்போது அருகில் இருந்த மின்சார கம்பி உடலில் பட்டது. தொடர்ந்து அவர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பலர் நிவேதா லட்சுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த நிவேதா , லட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு நிவேதா லட்சுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். எங்கள் மகள் தற்கொலை செய்து இருக்கமாட்டாள்.
மேலும் அவரது சாவில் சந்தேகம் உள்ளது. அவர் வேலை பார்த்த ரத்னா மெடிக்கல் சென்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தில்லைநகர் போலீஸ் உதவி கமிஷனர் ராஜூ மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடையாத பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ரத்னா மெடிக்கல் சென்டர் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அங்கு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, வயலூர் ரோடு பகுதியில் உள்ள ரத்னா மெடிக்கல் சென்டரில் நர்சாக பணியாற்றி வரும் நிவேதாலட்சுமி இங்கு பணிக்கு சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது. இந்நிலையில் இவர் நேற்று மதியம் 3 மணியளவில் அவர் வேலை செய்யும் மெடிக்கல் சென்டரின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். முதல் கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது என்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050