திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கீரம்பூர் காந்திநகர் காலனியை சேர்ந்த பெருமாள் மனைவி ராசாத்தி (45). இவருக்கு நந்தகுமார் (25), கார்த்திக் (22) என்கிற 2 மகன்கள் உள்ளனர். இதில் கார்த்திக் அடிவாரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வினோத் (எ) பன்றி வினோத் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கார்த்திக் பெரம்பலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்தாக தெரிகிறது. இதில் பிரச்சினை ஏற்பட்டதால் மனம் உடைந்து கடந்த செப்டம்பர் மாதம் வீட்டிற்கு தெரியாமல் சென்னைக்கு சென்று, அங்கு கூலி வேலை பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராசாத்தி தனது மகன் கார்த்திக் வீட்டிற்கு வராததால் வினோத்தின் (40) உதவியுடன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இதனைத் தொடர்ந்து வினோத் மற்றும் காணாமல் போன கார்த்திக்கின் சகோதரரான நந்தகுமார் ஆகிய 2 பேரும், அடிவாரப் பகுதியை சேர்ந்த விஜய் (24) என்பவரிடம் கார்த்திக்கை பற்றி பாரில் வைத்து விசாரித்துள்ளனர். அப்பொழுது விஜய்க்கும், வினோத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பானது. அப்பொழுது வினோத் அருகில் இருந்த கட்டையை எடுத்து விஜயை தாக்கியதில், தலையில் பலத்த காயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வினோத் மற்றும் நந்தகுமார் ஆகிய 2 பேரும், விஜயின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து, பச்சை மலையில் உள்ள தாளூர் கிராமத்தில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான முந்திரி தோட்டத்தில் புதைத்தனர். இதனைத் தொடர்ந்து தோட்டத்து உரிமையாளரான ஜெயராமன் சந்தேகம் அடைந்து துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.




மேலும், அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வட்டாட்சியர் வனஜா ஆகியோர் கொண்ட குழுவினர் தொழிலாளர்கள் உதவியுடன் தோண்டி பார்த்ததில் ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அது விஜய் என்றும், கொன்று புதைக்கப்பட்டதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து வினோத், நந்தகுமார் ஆகிய 2 பேரும் துறையூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விரைவாக புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் விஜய்யை கொலை செய்யும் பொழுது, வைரிசெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (27), அடிவாரப் பகுதியை சேர்ந்த சிவா (31) மற்றும் காணாமல் போன கார்த்திக்கின் தாயார் ராசாத்தி (42) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்தில் இருந்ததும், கொலை செய்த பிறகு பிணத்தை மறைக்க உதவி செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து 3 பேரையும் துறையூர் போலீசார் தேடி வந்தனர்.


இதையடுத்து அவர்கள் கீரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணனிடம் சரணடைந்தனர். அவர் 3 பேரையும துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த துறையூர் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.