காவல் நிலையத்திற்கு வந்த அழைப்பு
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு , சென்னை புது வண்ணாரப்பேட்டை , MPT பள்ளி அருகே அப்பகுதியில் பிளாட் பாரங்களில் தங்கி வரும் ஜான் பாஷா , (வயது 39) என்பவர் பேச்சு மூச்சின்றி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் , H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ குழுவினர் ஜான் பாஷாவை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதன் பேரில், ஜான் பாஷாவின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து , H-5 புது வண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் இயற்கைக்கு மாறான மரணம் பிரிவில் (194 BNSS) பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
உடலில் காயங்கள், சந்தேகப்பட்ட போலீசார்
இந்நிலையில், பிரேத பரிசோதனையில், இறந்து போன ஜான்பாஷாவின் கழுத்து எலும்பில் காயங்கள் இருப்பதாகவும், உடலில் சில இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் யாரேனும் தாக்கியதால் இறந்திருக்கலாம் எனவும் தெரியவந்ததின் பேரில், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
திருநங்கையுடன் வாக்குவாதம்
H-5 புது வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் , 22.05.2025 அன்று நள்ளிரவு இறந்து போன ஜான் பாஷா மது அருந்திய நிலையில் இருந்ததாகவும் , அப்போது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மலாய்க்கா என்ற திருநங்கைக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு மலாய்க்கா சென்றதாகவும், பின்னர் அதிகாலை (23.05.2025) மீண்டும் மலாய்க்கா ஜான் பாஷாவிடம் பேசிய போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாகவும், அப்போது மலாய்க்கா, ஜான்பாஷாவை கையால் தாக்கிய போது கீழே விழுந்த ஜான் பாஷாவின் கழுத்தில் காலை வைத்து மிதித்தும், எட்டி உதைத்தும் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாகவும் மலாய்க்கா தெரிவித்தார்.
மேற்படி வழக்கின் சட்டப் பிரிவை கொலை பிரிவில் மாற்றம் செய்து , இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மலாய்க்கா ( வயது 38) என்ற திருநங்கையை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் SBI ATM - ல் வாடிக்கையாளர் பணத்தை முடக்கி , நூதன முறையில் திருடிய நபர்கள்.
சென்னை திருவல்லிக்கேணி கபாலி நகர் பகுதியில் வசித்து வரும் நரேன்குமார், ( வயது 34 ) என்பவர் Hitachi ATM Service நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்திலிருந்து நரேன்குமாரை தொடர்பு கொண்டு அதிகாரிகள் திருவான்மியூர் , திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள SBI ATM சென்டரில் ஏதோ தவறு நடந்துள்ளது. ஆய்வு செய்யுமாறு கூறியதின் பேரில் , நரேன்குமார் SBI ATM சென்டரில் ஆய்வு செய்தபோது , யாரோ பணம் வரக் கூடிய இடத்தில் கருப்பு நிற அட்டையை வைத்து பணம் வெளியே வராமல் தடுத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து நரேன்குமார் J-6 திருவான்மியூர் காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் , உதவி ஆணையாளர் நீலாங்கரை மற்றும் திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்யப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்து , சம்பவயிடத்தில் கிடைத்த தகவல் தொழில் நுட்ப பதிவுகள் மற்றும் ATM கண்காணிப்பு குழுவினருடன் ஒருங்கிணைத்து மேற்கண்ட குற்ற நிகழ்வில் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டனர்.
திருவான்மியூர் மட்டுமில்லாமல் சென்னை புறநகர் பகுதிகளிலும் இதில் தொடர்புடைய நபர்களின் பதிவுகளை பெற்று , உத்திர பிரேதச மாநிலத்தை சேர்ந்த குல்தீப் சிங் ( வயது 26 ) , பிரிஜ்பான் ( வயது 30 ) , சுமித் யாதவ் ( வயது 33 ) ஆகிய மூவரை திருவான்மியூர் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
ATM - ல் , எப்படி பணம் திருடப்பட்டது
மேற்படி நபர்கள் ATM இயந்திரத்தின் முதல் கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து , பணம் வரக்கூடிய இடத்தில் ஒரு கருப்பு நிற அட்டையை வைத்து விட்டு கதவை பூட்டி விட்டு சென்று , வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்த பின்பு , மீண்டும் உள் நுழைந்து பணம் எடுத்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சனி ஞாயிறு ஆகிய இரு நினங்களில் வாடிக்கையாக கொள்ளையடித்து வருவதும் உபேர் ஓலா செயலி மூலமாக கார்களை புக் செய்து இரயில் நிலையங்களுக்கு சென்று ஒவ்வொரு முறையும் உத்திரப்பிரதே மாநிலத்திற்கு தப்பிச் சென்றது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து கள்ளச்சாவி, கருப்பு நிற ஸ்டிக்கர், இருபக்க டேப்ஸ் ஆகியவை கைப்பற்றப்பட்டது.