நாகையில் பல பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து மிரட்டி பணம் பறித்தவனை காப்பாற்ற, காவல்துறையினர் சாதகமாக நடந்து கொள்வதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


பொள்ளாச்சி சம்பவத்தை மிஞ்சும் அளவிற்கு கைப்பேசியில் அப்பாவி பெண்கள் குளிக்கும்போது ஆபாச படம் எடுத்தது தொடங்கி, பணம் பறிப்பு பாலியல் தொல்லை என பெண்களை தனியார் விடுதி வரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வரை அவனது சேட்டைகளை அதிர்ச்சியோடு தெரிவிக்கின்றன ஒட்டுமொத்த கிராம மக்கள். 


நாகை மாவட்டம் முப்பத்தி கோட்டத்தை சேர்ந்தவர் ஜீவா மகன் பாரதிராஜா வயது 26. எம்.ஏ., பட்டதாரி.
இவரது வீடு அக்கிராமத்தின் ஆற்றங்கரையோரம் உள்ளது. கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், மாணவிகள் ஆற்றில் குளிக்கும் போது மறைவில் இருந்து தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சம்பந்தப்பட்ட பெண்களிடம் காண்பித்து மிரட்டி தன் விருப்பத்திற்கு உடன்பட வைத்து  பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதோடு மிரட்டி பணம் பறித்து உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் நாகையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவியையும் மிரட்டி தன் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி உள்ளார். அந்த மாணவி பாரதிராஜா கேட்கும் போதெல்லாம் பணம் தர மறுத்ததால் அவரது ஆபாச படத்தை, கடந்த 9ம் தேதி வாட்ஸ்அப்பில் பரவ விட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவியின் சகோதரர்கள் அவரை தட்டி கேட்டபோது கைகலப்பாகி உள்ளது.  இதனையடுத்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். திருக்குவளை காவல்துறையினர் பாரதிராஜாவை கைது செய்து அவர் செய்த குற்றத்திற்கு தகுந்த வழக்குகள் பதிவு செய்யாமல் சாதாரணமாக பிணையில் வரும் வழக்குகளில் மட்டுமே பதிவு செய்து சிறையில் அடைத்த துள்ளதாக பாதிக்கப்பட்டவரின் உறவினர் தெரிவித்தனர்.




இதுகுறித்து உறவினர்கள் மேலும் கூறுகையில், “35 ஆண்டுகளுக்கு முன் எங்கள் கிராமத்தில் குடியேறிய ஜீவாவிற்கு 2 மகன்கள் 2 மகள்கள். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஜீவாவும் அவரது மூத்த மகனும் கூலி தொழிலாளிகள். பாரதிராஜா நாகையில் உள்ள கல்லூரியில் படித்தார். பிரச்னை வெளியானவுடன் பாரதிராஜா கிராமத்தில் இருந்து வெளியேறி சென்னை செல்ல முயன்றப் போது மேலப்பிடாகையில் அவரை மடக்கி பிடித்து செல்போனை சோதனையிட்டோம். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள், மாணவிகள், சிறிய குழந்தைகள் என 15 நபர்களின் ஆபாச படம் மற்றும் வீடியோ மட்டுமல்லாமல் வேறு பகுதியை சேர்ந்த இளம் பெண்களின் தகவல் இருந்தது. (இருந்ததாக தெரிவித்துள்ளனர்). பணத்திற்காக தனது நண்பர்களுடன் இணைந்து செயல்பட்டதாக ஒப்புக் கொண்டதாகவும் தடயத்தை மறைக்க செல்போனை தரையில் அடித்து உடைத்து அருகில் இருந்த வாய்க்காலில் தூக்கிப் போட்டதாக தெரிவித்த கிராம மக்கள், அவர் மீது புகார் அளித்தும் அவரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் சாதாரணமாக ஜாமினில் வெளியில் வரும் பிரிவுகளின் படி போலீசார் வழக்கு பதிந்தனர். அவரை காப்பாற்ற ஒரு நெட்வொர்க்கே இயங்குகிறது”என தெரிவித்தனர்.


பாதிக்கப்பட்ட மாணவி கூறும் போது, “என்னை தங்கை என அண்ணன் முறையோடு பழகிவந்தார். இருவரும் ஒரே கல்லூரியில் படித்ததால் சாதாரணமாக பேசுவது வழக்கம். 2 ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் குளிப்பதை படம் எடுத்து கல்லூரியில் என்னிடம் காண்பித்ததோடு நில்லாமல் சக மாணவர்களுக்கும் படத்தை அனுப்பப் போவதாக மிரட்டி வந்தார். ஒரு நாள் கல்லூரியில் இருந்து நான் வீட்டிற்கு புறப்படும் போது அவரது நண்பருடன் காரில் வந்து காரில் ஏறுமாறும், வீட்டில் இறக்கி விடுவதாக அழைத்து சென்றார். காரில் இருந்து கூல்டிரிங்ஸ் எடுத்து வற்புறுத்தி குடிக்க செய்தார். பின் மயக்கமடைந்ததும் தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்ததும் இதெல்லாம் சாதாரணம். உன்னை போல் ஏராளமானவர்களிடம் பழகியுள்ளேன் என 16 பெண்களின் புகைப்படத்தை காண்பித்தவர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தார். சமீபத்தில் கொரோனாவில் அப்பா இறந்து விட்டதால் பணம் இல்லை என்றதால் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்றார். 


தற்போது சிறையில் இருக்கும்  பாரதிராஜாவை போலீசார் காவலில் எடுத்து உரிய முறையில் கவனித்தால் மட்டுமே யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும், ஆபாச  படங்களை எங்கெல்லாம் சேமித்து வைத்துள்ள என்ற உண்மை தெரியவரும். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.