திருவண்ணாமலை அவலூர்பேட்டை புறவழிச்சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அனுதினமும் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், வேட்டவலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இது மட்டுமின்றி உள்நோயாளிகள், அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் என பல்வேறு நபர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், தற்காலிக செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காப்பாளர்கள், தூய்மை பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அனைவரும் உணவருந்த கேண்டின் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கேண்டனில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தில் இருந்து சுமார் 28 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என கேண்டின் நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை (8.8.2024 ) அன்று அனுப்பப்பட்டுள்ளது.




 


கேண்டினில் இருந்து ப்யூஸ் கேரியரை பிடுங்கி செல்லும் மருத்துவக் கல்லூரி முதல்வர்


இதனை பெற்றுக் கொண்ட கேண்டின் நிர்வாகம் 23-08-2024ம் தேதி 28,477 ரூபாய் மின் கட்டணம் செலுத்தி அதற்குண்டான ரசீதை பெற்றுள்ளனர். கடந்த மாதம் 24-ம் தேதி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஹரிஹரன் என்பவர் அதிரடியாக கேண்டினிற்குள் நுழைந்து மின்சார மெயின் இணைப்பைத் துண்டித்து மின்சார பெட்டியில் இருந்த மூன்று பியூஸ் கேரியரை பிடுங்கி சென்றுள்ளார். இதுகுறித்து கேண்டின் நிர்வாகத்தினர் கல்லூரி முதல்வரிடம் கேட்டதற்கு விவரம் ஏதும் சொல்லாமல் வெளியே சென்று உள்ளார். வெளியே சென்றபோது கேண்டினில் உணவருந்த வந்த பயிற்சி மாணவர்களிடம் கேண்டின் செயல்படவில்லை அனைவரும் செல்லுங்கள் என கூறிவிட்டுச் சென்றுள்ளார். மின் கட்டணம் செலுத்தி கடந்த இரண்டு வாரங்களாக ப்யூஸ் கேரியரை தராமல் மருத்துவக்கல்லூரி முதல்வர் இருப்பதால் அனுதினமும் ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு பெற்று கேன்டீன் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மருத்துவக் கல்லூரி முதல்வர் ஹரிஹரன் கேண்டினிற்குள் நுழைந்து மின்சார பெட்டியில் இருந்து பியூஸ் கேரியரை பிடுங்குவது கண்காணிப்பு கேமரா காட்சியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


 




 


மருத்துவக்கல்லூரி முதல்வர் பியூஸ் கேரியரை பிடுங்குவது கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பு


மேலும் இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் செய்தி சேகரிக்க சென்றபோது அங்கு பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஏன் வீடியோ பதிவு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அதற்கு உண்டான கருத்தை செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதற்கு அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவர் கல்லூரி முதல்வர் போல் செயல்படுவதில்லை என்றும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தேவையானவற்றை எதையும் முழுவதுமாக பெற்று தருவதில்லை என மூனுமுனுத்தனர். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கேண்டீனிற்குள் புகுந்து மின்சார பெட்டியில் இருந்து பியூஸ் கேரியரை பிடுங்கி சென்ற சம்பவம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.