திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனக்கரசு 42 வணிகவியல் ஆசிரியராக கடந்த 20 ஆண்டு காலமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்கப்பட்டு பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இப்பள்ளியில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு அடிக்கடி வராமல் நின்று விடுவாராம், இந்த மாணவியை பள்ளியில் இருந்து விடுவிக்க டிசி கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவியும் டிசியை பெரும் நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதிக்கு முன்பு தனக்கரசு குடிபோதையில் மாணவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய் என்ன செய்கிறாய் வீட்டுக்கு வா என செல்போனில் பேசி உள்ளார் என்று கூறப்படுகிறது.




மாணவியை வீட்டுக்கு வா என அழைத்த ஆசிரியர் 


அந்த மாணவியும் சார் நான் டி சி வாங்க போறேன், எனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறுகிறார். ஆனால் மீண்டும் வீட்டுக்கு வா என ஆசிரியர் அழைக்கிறார். அதற்கு மாணவி நான் ஏன் வரவேண்டும் என பேசுகிறார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி அந்த மாணவிக்கு வந்த செல்போன் உரையாடலை வைத்து சில இளைஞர்கள் ஆசிரியர் தனக்கரசுவை தனியாக ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று முட்டி போட வைத்து அந்த மாணவியின் செல்போன் நம்பர் உனக்கு எப்படி கிடைத்தது. திருமணம் ஆகி உனக்கு குழந்தைகள் இல்லையா , உனக்கு அக்கா தங்கச்சி இல்லையா, நாங்களும் தான் குடிக்கிறோம் ஆனால் இப்படி செய்ய மாட்டோம். உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும் என கேட்டு இளைஞர்கள் ஆசிரியரை தாக்குகின்றனர். அதில் அவரை தர குறைவாக பேசுகின்றனர். இதுகுறித்து அந்த இளைஞர்கள் ஆசிரியரை தாக்குவதை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். 




ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது 


தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சேத்துப்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஆசிரியரை தாக்கிய இளைஞர்கள் தலைமறைவு ஆனதை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ வைரல் குறித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டபோது தனக்கரசு 20 ஆண்டுகளாக பணிபுரிகிறார். இவருக்கு விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் அவர்களுடைய வீடியோ வைரல் ஆகி உள்ளதை நாங்களும் கேட்டோம் அவர் கடந்த 13 ஆம் தேதியிலிருந்து பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.