திருவண்ணாமலை (Tiruvannamalai news) வந்தவாசி, செங்கல்பட்டில் இருந்தபடி ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் குட்டிநாயுடு தெருவைச் சேர்ந்தவர் அருண் என்கிற அருணாச்சலம் வயது (50). இவரது வீட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் அருணாச்சலத்தின் பங்களாவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் கணினி மூலமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.அப்போது அவருடன் ஆன்லைனில் தொடர்பில் இருந்தவர் குறித்து விசாரித்தனர். அதில் அவர், செங்கல்பட்டு மாவட்டம் கோகுலபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சையத் இப்ராஹிம் வயது (44) என்பதும் அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சையத் இப்ராஹிம், அருணாச்சலம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரிடம் தீவிர விசாரணை
இந்த விசாரணையில், சையத் இப்ராஹிம் கடந்த 6 ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் என்பதால், அருணாச்சலம், அவரை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஆன்லைன் மூலம் சூதாட்டம் நடத்தியுள்ளார். சையத்இப்ராஹிம் செங்கல்பட்டில் இருந்தபடியும், அருணாச்சலம் வந்தவாசியில் இருந்தவாறும், ஆன்லைன் மூலமாக சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்தி கோடிக்கணக்கான பணத்தை சுரண்டியுள்ளனர் என தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரையும் சிறையில் அடைத்தனர்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய லேப்டாப், 6 செல்போன்கள் ரூ.48.50 லட்சம் பணம், 82 சவரன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் காவல்துறையினர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து கைப்பற்றிய 6 செல்போன் தொடர்புகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வந்தவாசியை சேர்ந்த முக்கியமான நபர்களின் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களும் அதில் சிக்குவார்கள் எனத்தெரிகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு முக்கியமான நபரை காவல்துறையினர் இன்று காலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.