மனைவியின் காதலனை அம்மிக்கல்லை வைத்து கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தை மீறிய பந்தம் ஒரு சில நேரங்களில் விபரீதமாக கொலை வரை சென்று விடுகிறது. அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார்(45). இவருக்கு பிரியா(35) என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.
சசிக்குமார்-பிரியா தம்பதி கடந்த ஒராண்டாக திருப்பூரில் தங்கி பணியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு பணியன் கம்பெனிகளில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது பிரியாவிற்கும் அங்கு வேலை பார்க்கும் தமிழரசன்(30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்ததாகவும் தெரிகிறது.
தமிழரசன் அந்தப் பகுதியில் தனிமையில் வசித்து வந்ததால் அவருடைய வீட்டிற்கு பிரியா அடிக்கடி சென்று வந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் அவருடைய கணவர் சசிக்குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக தெரியவந்துள்ளது. இந்தச் சூழலில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் இரவு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பிரியா சென்றுள்ளார். இதுகுறித்து சந்தேகமடைந்த சசிக்குமார் பிரியாவை பின் தொடர்ந்து அவர் செல்லும் இடத்திற்கு சென்றுள்ளார். ஆனால் பிரியா வேலைக்கு செல்லாமல் தமிழரசனின் வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.
இதைப்பார்த்த சசிக்குமார் தமிழரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த சசிக்குமார் அருகே இருந்த அம்மிக்கல்லை எடுத்து தமிழரசனின் தலை போட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தமிழரசன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து வேலம்பாலையம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சசிக்குமாரை கைது செய்துள்ளார். அவர்கள் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட தமிழரசனுக்கு ஏற்கெனவே திருமணம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய மனைவி 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்