திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகேயுள்ள கோடியூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான அஸ்வினி என்ற இளம் பெண், தனது மனஉளைச்சலால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான நபருடன் காதல்: 

அஸ்வினி, ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான சதீஷ்குமாரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு வளர்ந்ததோடு, காலப்போக்கில் காதலாக மாறியது. ஆனால், பின்பு சதீஷ்குமார், தனது திருமண நிலையை காரணமாகக் கூறி, அஸ்வினியுடன் திருமணம் ஆக முடியாது என நிராகரித்து வந்துள்ளார்.

இதனால் மனம் தளர்ந்த அஸ்வினி, இதற்கு முன் ஒரு முறை தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தார். அப்போதைய புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதோடு, வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர்.

ரயில்வே நிலையத்தில் தற்கொலை முயற்சி

இந்நிலையில், இன்று மீண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்த அஸ்வினி, ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே ரேணிகுண்டாவிலிருந்து வந்த சரக்கு ரயில் பாய்ந்தபோது, திடீரென ரயிலின் கீழே பாய்ந்துள்ளார். ஆனால் அவரது இரு கால்களும் ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்டன.

மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் கிடைத்தவுடன் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த அஸ்வினியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆரம்ப சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்