Continues below advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த பழனி (55) என்பவருக்கு சொந்தமாக திருப்பத்தூர் மாவட்டம் சுந்தரம்பள்ளி பகுதியில் சுமார் 11 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில், அந்த இடத்தை அடமானம் வைத்து 6 கோடி ரூபாய் பெற திட்டமிட்டு பழனியின் நண்பர் கொடுத்த ஆலோசனை பேரில் சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 11 ஏக்கர் நிலத்தை அடமானம் போட திட்டம் போட்டு அங்கு விரைந்துள்ளனர். 

லோன் கொடுப்பதாக ஆசை வார்த்தை

லோன் அங்கீகரிக்கும் இடத்தில் இருந்த சங்கீதா உங்களுடைய இடத்தை நேரில் வந்து பார்க்கிறோம். பிறகு உங்களுக்கு லோன் போட்டு கொடுக்கிறோம் என்று சொல்லி விட்டு கடந்த மார்ச் மாதம் சென்னையில் இருந்து திருப்பத்தூர் விரைந்த குழு, நிலத்தை பார்த்து விட்டு உடனடியாக லோன் கொடுக்கிறோம் என்று ஆசை வார்த்தை கூறி இடத்தை சங்கீதா பெயருக்கு சுத்த கிரயம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Continues below advertisement

பிறகு பழனியும் தனது 11.50 ஏக்கர் சொத்தை சங்கீதா பெயருக்கு மாற்றி கொடுத்து உள்ளனர். சங்கீதா ரூ.35 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு எழுதப்படாத 4 காசோலையை கையெழுத்து போட்டு கொடுத்து உள்ளார். பணம் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டு பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.பழனி கடன் தொல்லையால் பணத்தை அடிக்கடி கேட்டு வந்துள்ளார். பழனியை சமாளிக்க அந்த பெண், அவரை காதல் வலையில் விழ வைத்து ஆசை வார்த்தை கூறி அவ்வப்போது பேசி வந்துள்ளார்.

அழகில் மயங்கிய நபர்

இதில், மயங்கி போன பழனி, சங்கீதா சொல்வதற்கெல்லாம் தலையாட்டி உள்ளார். இதன் விளைவாக சொத்தை சொந்தம் கொண்டாட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை எப்படியாவது விற்பனை செய்து செட்டில் ஆகி விட வேண்டும் என்று நினைத்து இடத்தை விற்பதில் குறியாக இருந்துள்ளார். இதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் செய்த வேலையை விட்டு விட்டு நிலத்தை விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு பழனிக்கு தெரியாமல் சொத்தை விற்பனை செய்ய ஆள் வரவழைத்து விற்பனைக்கு காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனி சங்கீதாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், பழனி கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகரிடம் சென்று அவருக்கு நிலத்தை எழுதி கொடுக்கிறேன் என்று ரூ.50 லட்சம் வாங்கி கொண்டதாக தெரிகிறது.

சொத்தில் உரிமை கொண்டாடிய பெண்

சங்கீதாவும் சென்னையை சேர்ந்த சிலரிடம் அந்த சொத்தை காட்டி ரூ.1 கோடி வாங்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சங்கீதா சொத்தை நான் விற்பனை செய்து கொள்வேன், சொத்து என்னுடையது என்று உரிமை கொண்டாட ஆரம்பித்து உள்ளார். இதனால் கதி கலங்கி போன பழனி இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை விடியற்காலை சென்னை விரைந்த போலீசார் சங்கீதாவை கைது செய்து கந்திலி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியதில் பணத்திற்காக நிலத்தை எழுதி வாங்கி கொண்டு சொத்தை சொந்தம் கொண்டாடியது அம்பலமானது. அடுத்தவர் சொத்தை ஏமாற்றி பறித்த குற்றத்திற்காக அவரை கைது செய்து சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

அப்போது உடல் மருத்துவ பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது சங்கீதாவிற்கு வக்காலத்து வாங்க வந்த வழக்கறிஞர் வீடியோ எடுத்த செய்தியாளர்களை தடுத்து நிறுத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிபதி அந்த பெண்ணை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் வேலூர் மத்திய சிறையில் சங்கீதா அடைக்கப்பட்டார். 

அடுத்தவன் சொத்தை சொந்தம் கொண்டாட நினைத்தால் என்னமாதிரியான நிலை ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாகும்.