திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே 2 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு பயிலும் மாணவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் பணியாற்றி வரும் சரவணன் என்ற ஆசிரியர் அந்த சிறுமியை கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர் சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், ஆசிரியரை உடனடியாக கைது செய்யக் கோரி அப்பகுதி பொதுமக்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் பதற்றமான சூழல் நிலவியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் காவல்துறையினர் சிங்கப்பெண் அதிரடிப் படையினர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மேனகா ஆகியோர் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஆசிரியரை காவல்துறையினர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பள்ளி மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்சோ சட்டம்
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 (போக்சோ சட்டம்), (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012) என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனைச் சுருக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம் , மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.
போக்சோ சட்டத்தின் அம்சங்கள்
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம் என சட்டம் குறிப்பிடுகிறது.
சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது. மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
