திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பிரியாணி மாஸ்டருக்கு 18 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பால்னங்குப்பம் துரைசாமி வட்டம் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் அமீர்பாஷா(33). இவர், பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமீர்பாஷாவுக்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், அமீர் பாஷா சென்னையில் அமீர் டிரேடிங் கோ என்கிற நிறுவனம் நடத்தி அதில் 18 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை உடனடியாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும், அமீர் பாஷா திருப்பத்தூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மட்டுமே தனக்கு வங்கி கணக்கு உள்ளதாகவும் எனது பான் கார்டை வைத்து மர்ம நபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என வேதனை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, தனது ஆவணங்களை வைத்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
மேலும், ஜிஎஸ்டி மோசடி கும்பல் ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட இடங்களில் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டனர். தற்போது திருப்பத்தூரை குறி வைக்கும் மோசடி கும்பலால் அந்தப்பகுதி பீதி அடைந்துள்ளனர்.