ஜோலார்பேட்டையில் ஒப்பந்ததாரரை காரில் கடத்தி கட்டாய பத்திரப்பதிவு செய்ய முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடியானகுப்பத்தைச் சேர்ந்த சிலரிடம் 6.5 ஏக்கர் நிலத்தை விற்று தருவதாக கூறி மனைவி பெயரில் பவர் பட்டா செய்துள்ளார். 

ஆனால், நிலத்தை கொடுத்த சிலர் தங்களுக்கு அதற்குண்டான தொகை வேண்டும் என கேட்டு வந்த நிலையில் ரவிச்சந்திரன் அந்த நிலத்தை நாட்றம்பள்ளி அடுத்த மல்ல குண்டாவை சேர்ந்த குமார் (44) மின் டவர் அமைக்கும் ஒப்பந்ததாரருக்கு  நிலத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார். ஆனால், குமார் அந்த நிலத்திற்கான முழு தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதன் காரணமாக ரவிச்சந்திரனுக்கும், குமாருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

Continues below advertisement

இந்த நிலையில் நேற்று குடியானக்குப்பத்திற்கு தனது குடும்பத்துடன் குமார் வந்திருப்பதை அறிந்த ரவிச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சென்று உனக்கு கிரயம் கொடுத்த சொத்தை மீண்டும் எனக்கு தரும்படி கூறியுள்ளார். ஆனால், குமாரோ நிலத்தை கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என்றால் கூடுதல் பணம் தர வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் குமாரை தாக்கி அங்கிருந்து ஜோலார்பேட்டை சப் ரிஜிஸ்டர் ஆபீஸிக்கு அழைத்து வந்தனர். 

இதனால் ஜோலார்பேட்டை சப் ரிஜிஸ்டர் ஆபீஸில் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது குமாரின் தாயார் தங்களை காரில் கடத்தி வந்து கையெழுத்து வாங்க முற்படுகின்றனர் கதறி அழுதார்.  இதனால் சப் ரிஜிஸ்டர் இரு தரப்பினரின் சம்மதம் இல்லாமல் பத்திர பதிவு செய்ய முடியாது என நிராகரித்துவிட்டார். 

இதுகுறித்து குமார் தரப்பினர் எஸ்பி அலுவலகத்திற்கு கொடுத்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீசார் சப் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு விரைந்தனர். பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர் 

அப்போது குமார் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், காரில் கடத்திச் சென்று கையெழுத்து வாங்க முற்பட்டதன் காரணமாகவும் தாக்கியதன் காரணமாகவும் ரவிச்சந்திரனின் மகனான விஷ்ணு மற்றும் சம்பத் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நிலத்தை பத்திர பதிவு செய்து கொண்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்த குமாரை  காரில் கடத்திச் சென்று மீண்டும் பத்திர பதிவு செய்ய முற்பட்ட சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.