திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் கம்ப்யூட்டர் ஆபரேட்டருக்கு தலைமையாசிரியர் பாலியல் சீண்டல் கொடுத்த விவகாரத்தில் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நீயுடவுன் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பூனைகுட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 12 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

 

மேலும் இதே பள்ளியில் பெரிய மோட்டூர் பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகி கணவனை இழந்த பெண் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

 

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தமிழ் வழி சான்று அப்ரூவல் கொடுக்கும் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. அப்போது தலைமை ஆசிரியர் இந்த வேலையை சரியாக செய்தால் உனக்கு ஒரு முத்தம் கொடுப்பதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் வேண்டாம் சார் இது தவறு என கூறியுள்ளார்.

 

இருந்தபோதும் சற்று எதிர்பாக்காத நிலையில் அந்தப் பெண்ணுக்கு தலைமையாசிரியர் முத்தம் கொடுத்து அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் பயந்து போன அந்தப் பெண் இந்த சம்பவம் குறித்து தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் அறிந்த ஜோலார்பேட்டை போலீசார் முற்றுகையிட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன் பின்னர் ஜோலார்பேட்டை வட்டார கல்வி அலுவலர் அசோக் குமார் சம்பவ இடத்திற்கு வந்தார். அவரிடம் நடந்தவற்றை பெண் புகாராக அளித்தார். 

 

அதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தலைமையாசிரியர் சுப்பிரமணியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.