ஜோலார்பேட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர், கே.ஆர்.எஸ் வட்டம் பகுதியைச் சேர்ந்த சகாதேவன் (50), அவரது மனைவி மேரி (எ) தேவி (45) ஆகிய இருவரும் மீன் கடை வைத்து நடத்தி வந்துள்ளனர். அதே போன்று தே.மு.தி.க கட்சியிலும் தீவிரமாக இருந்த இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ள நிலையில் முதல் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். மகன் மற்றும் மகள் ஆகிய இருவரும் வெளியில் தங்கி படித்து வரும் நிலையில் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் இவர்களுக்கு சொந்தமான ஆடு அருகில் உள்ள ஏரி பகுதியில் கட்டி இருந்துள்ளனர். அதனை கண்ட அவரது உறவினர் ஒருவர் ஆட்டை ஏன் இன்னும் பிடித்து செல்லவில்லை என்று ஆட்டை பிடித்துகொண்டு அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சகாதேவன் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது கணவன் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.
மனைவி மேரி கட்டிலுக்கு அருகில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சீலிங் பேனில் தூக்கில் தூக்கு மாட்டி இறந்துள்ளனர் என்று ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் விரைந்து சென்ற ஜோலார்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இருவரும் மீன் வியாபாரம் செய்யும் சகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு மேரியை சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. நடத்தை சரியில்லை என்று கணவரின் சந்தேகத்தின் காரணமாக மனைவி மேரி முதலில் ஃபேனில் தூக்கு மாட்டி இறந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சகாதேவன் அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மனைவியை தூக்கில் இருந்து மீட்டு கட்டில் அருகில் படுக்க வைத்து விட்டு நல்ல குடிபோதையில் இருந்த சகாதேவன் மனைவி தூக்கு மாட்டிக் கொண்ட அதே பேனில் புடவையை எடுத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருப்பினும் முழுமையான இறப்பிற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று தகவல் அளித்துள்ளனர்.
ஜோலார்பேட்டை அருகே கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.