நெல்லை பாளையங்கோட்டையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த மத்திய சிறை உள்ளது. இங்கு பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற மற்றும் விசாரணைக் கைதிகள் சுமார் 1300 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க சுமார் 150 சிறை காவலர்கள், அலுவலர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகின்றனர். இதில் நன்னடத்தை கைதிகள் சிறை வளாகத்தில் உள்ள தோட்டம், ஹாலோ பிளாக் கற்கள் தயாரிப்பு, அங்காடி, டீ கடை, பெட்டிக்கடை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு சிறை அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 




இந்நிலையில், கடந்த 25ம் தேதி தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த ஜீவா என்ற கைதி பிணையை மீறிய காரணத்துக்காக போலீசார் அவரை மீண்டும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு வந்த நிலையில் மஞ்சள் காமாலை இருப்பதாக கூறியதால் காவலர்கள் அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது ஜீவா போலீசார் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த டேவிட் என்ற ஆயுள் கைதி சிறை அங்காடியில் டீ மாஸ்டராகவும், பரோட்டா மாஸ்டராகவும் பணிபுரிந்து வந்தார். அப்போது கடந்த 27ம் தேதி சிறை அங்காடி பணியில் இருந்த காவலர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாவி போட்டு தப்பி ஓடினார். சிறை அங்காடி கல்லாவில் இருந்த 4 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தப்பிச்சென்ற டேவிட்டை காவலரின் வாகன எண்ணை வைத்து சிசிடிவி காட்சிகள் மூலம் ஆராய்ந்து தேடி வருகின்றனர்.




இரண்டு கைதிகள் தப்பிச் சென்றது காவல்துறை வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்திய நிலையில் நெல்லை சீவலப்பேரியை சேர்ந்த கொலை வழக்கு கைதி சீனித்துரை பரோலில் வெளியே சென்ற நிலையில் நேற்றுடன் அவருக்கு பரோல் முடிந்தது. நேற்று மாலைக்குள் அவர் சிறைக்கு திரும்ப இருந்த நிலையில் திடீரென தலைமறைவானதால் போலீசார் அவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறை அலுவலர்கள் மற்றும் உளவுத்துறையின் அலட்சியம் காரணமாகவே கைதிகள் தப்பி செல்வதாக புகாரும் எழுந்துள்ளது. குறிப்பாக டீ மாஸ்டர் டேவிட் ஏற்கனவே ஒருமுறை தப்ப முயற்சி செய்தது தெரியவந்த பிறகும் சிறை அலுவலர்கள் மீண்டும் அவரை சிறை அங்காடி பணியில் அமர்த்தியுள்ளனர். அங்காடி போக்குவரத்து சாலை ஓரம் அமைந்திருப்பதால் கைதிகள் எளிதில் தப்ப முடியும். எனவே ஒருமுறைக்கு பலமுறை கைதிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து நற்சான்று பெற்ற கைதிகளை மட்டுமே இதுபோன்று அங்காடி பணியில் அமர்த்துவது வழக்கம். ஆனால் தப்ப நினைக்கும் கைதியை எப்படி அங்காடி பணியில் வைத்தார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தற்போது சிறை தலைமை காவலர் கந்தசாமியை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். தப்பிய மூன்று பேரில் புளியங்குடியை சேர்ந்த ஜீவா என்ற கைதியை மட்டும் போலீசார் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பாளையங்கோட்டை சிறை கைதிகள் மூன்று பேர் கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்து ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண